Published : 18 Feb 2015 08:50 AM
Last Updated : 18 Feb 2015 08:50 AM

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கேள்விகளுக்கு பதில் அளிக்காத குவாரி அதிபர்கள்: வழக்கறிஞர்கள் மட்டும் சந்திப்பு

கிரானைட் முறைகேடு குறித்த 2 நாள் விசாரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முன் பிஆர்பி உட்பட குவாரி அதிபர்கள் ஒருவர்கூட ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் ஒரே மாதிரியான பதிலையே விளக்க மனுக்களாக தாக்கல் செய்தபோதும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் 2-வது நாளாக குவாரி அதிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். பொதுமக்களிடம் இருந்து 418 மனுக்கள் பெறப்பட்டன. இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, மோசடிகளை வகைப்படுத்திருந்தார். இதற்கு குவாரி அதிபர்களிடம் விளக்கம் பெறுவதற்காக 16 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நேற்று பிஆர்பி கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் செந்தில்குமார் உட்பட 5 பேரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பி.ஆர்.பழனிச்சாமி ஆஜராகலாம் என்ற பரபரப்பு காணப்பட்டதால், சகாயம் அலுவலகத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஆனால், சம்மன் அனுப்பப்பட்ட 5 குவாரிகளின் சார்பில் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர். பிஆர்பி எக்ஸ்போர்ட், பிஆர்பி கிரானைட், பிஆர்பி மகன் செந்தில்குமார், உறவினர் முருகேசன் ஆகியோர் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் அருண்பிரசாத், அருண் ஆகியோர் வந்திருந்தனர். சகாயத்திடம் வழக்கறிஞர் அருண்பிரசாத் மட்டும் ஆஜரானார்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி மற்றும் பிஆர்பி நிறுவன மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: 4 பேரின் சார்பில் தனித் தனியாக 4 விளக்க மனுக்கள் சகாயத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிஆர்பி மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பி.ஆர்.பழனிச்சாமி குறித்து தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி விசாரணையில் நேரில் ஆஜராக வந்தால், போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கலாம் என்பதால் அவர் நேரில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குவாரி நடத்தியதில் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சகாயம் கேட்டார். இதற்கு வழக்கறிஞர், ‘பிஆர்பி நிறுவனங்களின் கிரானைட் மோசடி தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணை யில் உள்ளன.

இதில் தங்கள் தரப்பு நியா யங்கள், விளக்கங்களை நீதி மன்றத்தில் தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில் தனியாக வேறு ஏதும் கூற இயலாது’ எனத் தெரிவித்துள்ளார். இதை அப்படியே பதிவு செய்துகொள்ளவா என சகாயம் கேட்டார். `தாராளமாக பதிவு செய்யலாம்’ என வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். இந்த விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

சிந்து கிரானைட் சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், லட்சுமி எக்ஸ்போர்ட் சார்பில் வழக்கறிஞர் அர்ஜுனராஜா, தீபா இன்ப்ளக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி விளக்க மனுக்களை சகாயத்திடம் தாக்கல் செய்தனர்.

குவாரி அதிபர்கள் மூலம் முக்கிய தகவல் ஏதும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சகாயத்தின் எந்த கேள்விக்கும் குவாரி அதிபர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. மேலும், அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்று 3 நிறுவனங்களுக்கும், நாளை வியாழக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி சம்பந்தபட்ட ஒலிம்பஸ் குவாரி உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x