Published : 21 Feb 2015 10:38 AM
Last Updated : 21 Feb 2015 10:38 AM

டிரைவர் மீது மாணவர்கள் தாக்குதல்

எழும்பூரில் அரசு பேருந்து டிரைவரை, பள்ளி மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து களை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு ‘29ஏ’ அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டிருந்தனர். எழும்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்தை நிறுத்திய டிரைவர் பென்னெட், அவர்களை உள்ளே வரும்படி கூறினார். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மாணவர்கள், டிரைவரின் முகத்தில் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். அங்கி ருந்த போலீஸார் டிரைவரைத் தாக்கிய 4 மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் வழியாக சென்ற அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

டிரைவரைத் தாக்கிய மாணவர் களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதன் காரணமாக எழும்பூர் பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முகத்தில் காயமடைந்த டிரைவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிரைவரை தாக்கிய 4 மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.