Published : 20 Feb 2015 07:26 PM
Last Updated : 20 Feb 2015 07:26 PM

கோமாளி, குடிமகன் வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

'கோமாளி', 'குடிமகன்' என்று விமர்சிப்பதையும் வருணிப்பதையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பதுதான் சட்டமன்றத்தில் நாகரிகமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

"பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் தமிழக சட்டப்பேரவை எவ்வாறு செயல்படுகிறது?

பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினரை 'கோமாளி' என்று அவையிலே விமர்சனம் செய்கிறார்.

கேட்டால் பேரவைத் தலைவரும், அமைச்சரும் அந்த வார்த்தை பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் கூறுகிறார்கள்.

கோமாளி என்ற வார்த்தையைப் பொதுப்படையாகக் கூறுவதற்கும், மற்றொரு உறுப்பினரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்கும் வேறுபாடு கிடையாதா? அதற்காக வெளியேற்றி விட்டார்கள்.

கோமாளி என்று பேசிய உறுப்பினர் எதிர்க்கட்சியிலே இருந்தபோது எப்படியெல்லாம் பேசினார்? அவர் வெளியேற்றப்பட்ட போது, அவைக் காவலர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்திய புகைப்படமே அப்போது வெளிவந்ததது.

தேமுதிகவைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சித் தலைவரை 'குடிமகன்' என்று ஆளுங்கட்சி உறுப்பினர் வருணித்தால், எதிர்க்கட்சிக்காரர்கள் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? அதுதான் இந்தச் சட்டமன்றத்தில் நாகரிகமா? பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

ஆளுங்கட்சி உறுப்பினர் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை விமர்சனம் செய்தால், இவர்களுடைய தலைவியைப் பற்றி அவர்கள் எதிர்வாதம் செய்ய நேரிடுகிறது. அதை எதிர்த்துக் கேட்டால் வெளியேற்றம்!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதை வேண்டுமென்றாலும் பேசுவார்கள்; அதை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சட்டமன்ற ஜனநாயகமாம்! இதுதான் இப்போது நடக்கிறது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x