Published : 08 Feb 2015 03:15 PM
Last Updated : 08 Feb 2015 03:15 PM

பெற்றோர் ஏற்பாடு செய்யும் கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்த வட்டாட்சியரிடம் பள்ளி மாணவி கதறல்

பெற்றோர் ஏற்பாடு செய்யும் கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென ஆம்பூர் வட்டாட்சியரிடம் பிளஸ் 1 மாணவி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்பூர் அடுத்த மோதகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமரேசன் (40).இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாட்டை செய்ய தொடங்கி, சென்னையைச் சேர்ந்த உறவுக்காரர் சக்திவேல் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். தான் படிக்க வேண்டும். இப்போது திருமணம் வேண்டாம் எனக்கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்காத பெற்றோர் கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த அந்த மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உமராபாத் போலீஸில் புகார் அளிக்கச்சென்றார். அங்கு அவரது புகார் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதைதொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தன் நிலைமையை விளக்கினார் அந்த மாணவி. இதையடுத்து, ஆம்பூர் வட்டாட்சியர் சரஸ்வதி இது குறித்து விசாரணை நடத்துவார் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பேரில் மேல்சான்றோர் குப்பம் வருவாய் ஆய்வாளர் லலிதா, மோதகப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் பிரசாந்த் மற்றும் வருவாய் துறையினர் நேற்று மோகதப்பள்ளிக்கு சென்று அங்கு வீட்டில் அடைக்கப்பட்டடு இருந்த மாணவியை மீட்டு, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலத்துக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து மாணவியை தேற்றிய வட்டாட்சியர் சரஸ்வதி, வேலூர் அல்லாபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை ஒப்படைத்தார். அதன்பின்பு கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்த குமரேசன் - கவிதாவிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x