Published : 26 Feb 2015 09:43 AM
Last Updated : 26 Feb 2015 09:43 AM

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர் நேரடி நியமனம் - தமிழகத்தில் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் நியமன முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பதிவுமூப்பு முறைக்கு பதிலாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தாலும், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தாலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள், பதவியின் தகுதிக்கேற்ப மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை பரிந்துரை செய்யும் நபர்களின் பதிவுமூப்பு பட்டியலில் இருந்து தகுதியான நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்நிலையில், அரசுப் பணி நியமனங்களுக்கு பதிவுமூப்பு முறையை ரத்து செய்துவிட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை பின்பற்றியே அரசு போக்குவரத்துக் கழகங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பும் பணி நடந்துவருகிறது. இதுவரை இப்பணியிடங்கள் பதிவுமூப்பு மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து, அரசு பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம் இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர் பதவிகளில் 80 காலியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்போவதாக அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் பெற்று நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என்றாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மையமும் இளநிலை உதவியாளர், பண்டக காப்பாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், கணினி பொறியாளர், ஓவியர், தொழில்நுட்ப உதவியாளர், மின்மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை நேரடியாக நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நுற்பாலை உட்பட 6 கூட்டுறவு நூற்பாலைகளில் ஷிப்ட் மேற்பார்வையாளர் பணிகளில் 16 காலியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்று தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியமும் வயர்மேன், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர், மின்கட்டண ரீடர் உள்ளிட்ட பதவிகளை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பதிவுமூப்பு முறை கைவிடப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் நியமனம் செய்வதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வருவதைக் கண்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x