Published : 09 Feb 2014 08:16 am

Updated : 09 Feb 2014 08:22 am

 

Published : 09 Feb 2014 08:16 AM
Last Updated : 09 Feb 2014 08:22 AM

ஹாவர்டு அல்ல, ஹார்டு வொர்க்தான் தேவை: சென்னையில் மோடி பேச்சு

ஹார்வர்டு பல்கலைக்கழக படிப்பால் முன்னேற்றம் வராது; ஹார்டு வொர்க் மூலம்தான் முன்னேற்றம் வரும் என்று சென்னை கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடுமையாக சாடிப் பேசினார்.அரசியல் காரணங்களுக்காக சி.பி.ஐ.யை மத்திய காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றும், அரசாங்கத்தை காப்பாற்றவும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவும் அதை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நமது மீனவர்கள் அண்டை நாடுகளில் சிறைபட, மத்தியில் உள்ள பலவீனமான காங்கிரஸ் அரசே காரணம் என்றும் அவர் கூறினார்.

தமிழக பாஜக சார்பில் 'சென்னையில் மோடி' என்ற தலைப்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள விஜிபி மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடந்தது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலை வகித்தார். தமிழ்த் தாய்க்கு என் வணக்கம் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இரவு 8.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.

'தமிழ்த் தாய்க்கு என் வணக்கம். தமிழ் மண்ணே வணக்கம். தமிழ் நண்பர்களே வணக்கம்' என்று அவர் தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார். பின்னர், இந்தியில் பேசினார். அவரது பேச்சை மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.

மோடி பேசியதாவது: "இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த பேரணியில் பேசிவிட்டு, அதன்பிறகு அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடந்த பேரணியில் பங்கேற்றுவிட்டு உங்களை சந்திக்க சென்னை வந்துள்ளேன். 2014-ல் மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும், தேர்தல் முடிவு எப்படி வரும், மத்தியில் யாருடைய ஆட்சி அமையும் என்ற கேள்விகளுக்கு இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் பதில் தெரிந்துவிடும். எந்தப் பக்கம் அலை வீசுகிறது என்பது தெரியும்.

பணக்காரர்களுக்காகவே காங். அரசு...

சுதந்திரம் அடைந்தபிறகு கடந்த 60 ஆண்டுகளில் நாடு சந்தித்த பிரச்சினைகளைக் காட்டிலும் கடந்த 10 நாட்களில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் சந்தித்து வரும் பிரச்சினைகள் அதிகம். காங்கிரஸ் அரசு பணக்காரர்களுக்காக இருக்கிறது. அவர்களை சுகமாக வாழவைக்கிறது.

பணக்காரர்கள் தங்கள் சக்தியைக் கொண்டு இந்த உலகத்தை விலைக்கு வாங்க முடியும். ஆனால் ஏழை எங்கே செல்வான்? உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கும் படிக்க வேண்டுமானால் அரசு பள்ளிக்கும்தான் செல்வான். அரசாங்கம் இருக்கிறது என்றால் அது ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

மீனவர்கள் சிறைபட காங்கிரஸே காரணம்...

ஒரு கட்சித் தலைவர் சொல்கிறார், ஏழ்மை என்பது ஒருவரின் மனநிலையைப் பொருத்தது என்று. இதுபோன்று பேசுவது ஏழைகளை ஏளனம் செய்வதில்லையா? இது அநியாயம் இல்லையா? இம்மாதிரியான ஆட்சி இருந்தால் ஏழைகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. மத்தியில் உள்ள அரசாங்கத்துக்கு ஏழைகள் மீது அக்கறை கிடையாது. அந்த மனஉறுத்தல் இருந்திருந்தால், தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் நடந்திருக்காது. இன்று தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இலங்கை சிறைகளில் அடைபட்டு அவதிப்படுகிறார்கள்.

அதேபோல் குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் சிறைகளில் அவதிப்படுகிறார்கள். இதற்கு 120 கோடி மக்கள் பொறுப்பல்ல. மத்தியில் உள்ள பலவீனமான அரசுதான் காரணம்.

உலகுக்கு நல்லது செய்ய நினைக்கும் சமுதாயம் நாம். ஆனால், இந்திய மக்கள் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா என பல்வேறு நாடுகளால் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மத்தியில் உள்ள பலவீனமான அரசுதான். அது கையை கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கிறது. அதனால் பாரத மக்கள் அண்டை நாட்டினரால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளுடன் நல்ல உறவு வேண்டும் என்றால்கூட மத்திய அரசு வலிமையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அண்டை நாடுகள் நம்முடன் நல்லுறவு கொள்ள அவர்களே முன்வருவார்கள்.

அதிகார துஷ்பிரயோகம்...

அரசு அமைப்புகள் சீரழிப்பு அரசியல் சட்ட அமைப்புகளின் புனிதத்தை, மரியாதையை, நேர்மையை பாதுகாக்காவிட்டால் மிகப்பெரிய பதற்றமான சூழல் நாட்டில் உருவாகி விடும். காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து அரசு அமைப்புகளையும் சீரழித்து வைத்துள்ளது.

ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது, பொறுப்புமிக்க மிக முக்கியமான பதவி. ஆனால், காங்கிரஸ் அரசு அதை துஷ்பிரயோகம் செய்கிறது. ஆளுநர் அலுவலகத்தை காங்கிரஸ் அலுவலகமாக மாற்றிவைத்துள்ளது. மாநிலத்தில் தேர்வு செய்யப் பட்ட சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றும். ஆனால், காங்கிரஸ் நியமித்த ஆளுநர் அதற்கான கோப்பில் கையெழுத்திட மாட்டார். இதனால், மாநில அரசாங்கத்தின் முன்னேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

அதேபோல் வருமானவரி அலுவலகத்தையும் காங்கிரஸ் அரசு துஷ்பிரயோகம் செய்கிறது. இத்துறையைப் பயன்படுத்தி, குஜராத்தில் மூலதனம் செய்வதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

ஆணையங்கள் முடக்கம்...

தேசிய மகளிர் ஆணையம், தேசிய சிறுபான்மை ஆணையம், தேசிய எஸ்சி., எஸ்டி ஆணையம் போன்றவை ஏழைகளுக்கு நன்மைகள் செய்யத்தான் இருக்கின்றன. ஆனால், இந்த ஆணையங்களை செயல்பட விடாமல் முடக்கியிருக்கிறார்கள்.

அரசியலுக்காக சிபிஐ...

அதேபோல் சி.பி.ஐ.யை காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்துகிறது. சி.பி.ஐ. மூலம் நல்ல செயல்களைச் செய்ய முடியும். தவறுகளைத் தடுக்க முடியும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறார்கள். அரசாங்கத்தை காப்பாற்றவும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவும் அதை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் நீதிமன்றத்தையும் இந்த அரசாங்கம் அவமதிக்கிறது.

சாதாரண ஏழை எளிய மக்கள் நீதித்துறை மீது, குறிப்பாக உச்சநீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் அரசு அவமதிக்கிறது. உணவுக் கிடங்குகளில் வீணாக கிடக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று நீதிமன்றம் சொன்னபோது அதை கேட்காமல் ஏழைகளுக்கு உணவு தானியங்களை கொடுக்க மாட்டோம் என்று அதை வெறும் 80 பைசாவுக்கு சாராய ஆலைகளுக்கு கொடுத்து ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள்.

நதிகள் இணைப்பு திட்டம்...

வாஜ்பாய் அரசு நடந்தபோது, தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று மிகப்பெரிய கனவு கண்டார். ஆனால், இந்த அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு கமிட்டியை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 15 மாதங்கள் ஆகியும் நீதிமன்ற தீர்ப்பின்படி கமிட்டியை மத்திய அரசு அமைக்கவில்லை.

சுதந்திரத்துக்கு பிறகு 60 ஆண்டில் அரசுக்கும், ராணுவத்துக்கும் நல்ல உறவு இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல பிரச்சினைகளால் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் மதவாத சிந்தனை இல்லை. ஆனால், இந்த அரசு ராணுவத்தில் எவ்வளவு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு கேட்டது. அந்தப் பாவத்தைச் செய்ய மாட்டோம் என ராணுவம் சொல்லிவிட்டது.

மாநில அரசுகளுடன் மோதல்...

மத்திய அரசுடன் மாநில அரசுகள் மோதல், மாநிலத்துக்கு மாநிலம் மோதல், தண்ணீர் பிரச்சினை இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசு எடுக்கும் முடிவை, அந்தக் கட்சியில் இருப்பவர் எதிர்த்து பேசுகிறார். திட்டக் கமிஷனுக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திட்டக் கமிஷன் பரிந்துரைகளை அரசு நிராகரிக்கிறது. அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையே மோதல்.

வாஜ்பாய் தலைமையிலான அரசு மாநிலங்களோடு ஒத்துழைத்தது. மாநிலங்களின் வளர்ச்சிக்கும், மக்களின் நன்மைக் காகவும் தோள்கொடுத்தது. இந்த அரசு கூட்டாட்சி முறைக்கு விரோதமாக செயல்படுகிறது. ஆனால், ஊழல் செய்வதில் கூட்டாட்சி முறை சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு ஊழலை சிறப்பாக செய்கின்றனர். இன்றைக்கு ஒரு காங்கிரஸ் தலைவர் குஜராத் சென்றார். குஜராத் மாநிலத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

ஏமாளி, முட்டாள் என அர்த்தம் கொடுக்கும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். யாரை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். 25 ஆண்டுகளாக குஜராத்தில் உங்களை மக்கள் அனுமதிக்கவில்லை. பாரத தேசத்திலும் அந்தப் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். குஜராத் மக்கள், எங்களை ஏமாற்ற முடியாது என்று காட்டியுள்ளனர். இனிமேல் பாரத தேசத்தின் மக்களும் ஏமாற்ற முடியாது என்பதை காட்டுவார்கள். பொருளாதார வளர்ச்சி...

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2003-04ம் ஆண்டில் 8.06 சதவீதம் இருந்தது. இவர் நிதி அமைச்சராக இருக்கும் நிலையில் 2012-13ம் ஆண்டில் 4.6 சதவீதமாக உள்ளது. இதுதான் உங்களுடைய சாதனையா? குஜராத் முதல்வராக நான் பொறுப்பேற்றபோது 2001-ம் ஆண்டு மாநில பொருளாதார வளர்ச்சி மைனஸ் 4.8 ஆக இருந்தது. 2001 முதல் 2012 வரை நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம். ஆனால், குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது" என்றார் நரேந்திர மோடி.

ப.சிதம்பரம் மீது தாக்கு...

மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பற்றி மோடி பேசும்போது, "மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர். அவர் வாக்கு எண்ணிக்கையில் தோற்றார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தார்.

மோடியின் பொருளாதார அறிவை சிறிய ஸ்டாம்பின் பின்னால் எழுதிவிடலாம் என்று அவர் கூறுகிறார். (ப.சிதம்பரத்தைப் பற்றி பலமுறை தனது பேச்சில் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர் என்று மோடி குறிப்பிட்டார்) காங்கிரஸ் அரசை பிரபல பொருளாதார நிபுணர் வழிநடத்துகிறார்.

நிதி அமைச்சரும் தன்னை அவருக்கு சமமான பொருளாதார நிபுணர் என நினைத்துக் கொள்கிறார். அவரைவிட புத்திசாலி யாரும் இல்லை என நினைக்கிறார். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் படித்து கடின உழைப்பால் வந்தவன். ஹார்வர்டு பல்கலைக்கழக படிப்பா அல்லது ஹார்டு வொர்க்கா (கடின உழைப்பு) என்பதை பார்த்துவிடுவோம்" என்றார் மோடி.

பாஜக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது...

மேலும் அவர் பேசும்போது, "குஜராத் அரசு நிறைய கடன் வாங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு மத்திய அரசு வாங்கிய கடன் ரூ.50 லட்சம் கோடி. இது நாட்டின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் ஆகும். இதுதான் பொருளாதார நிபுணர்களின் செயல்பாடு. ஆனால், பல்வேறு மாநில அரசுகள் வாங்கிய கடன், மத்திய அரசு வாங்கிய கடன்களைவிட குறைவுதான். ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறை அந்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை அளவோ 5.6 சதவீதம். எனவே, இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்திருப்பது நீங்கள்தான்.

தேசிய மாதிரி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்தியில் வேலையின்மை அளவு 2.2 சதவீதம். ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கதவைக்கூட பார்க்க முடியாத, டீ விற்ற ஒருவன் ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், வேலையின்மை வெறும் 0.5 சதவீதம்தான். இதை பெருமிதத்துடன் சொல்ல முடியும்.

ஹாவர்டு தேவையில்லை... ஹார்டு வொர்க் தேவை!

குஜராத்தில் வேலையின்மை குறைவு. ஆனால், வளர்ச்சி விகிதம் அதிகம். வேலைவாய்ப்பை உருவாக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. வேலையில் இருப்பவர்கள் வேலையை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, பொருளாதார அறிவு, புத்தகத்தில் இருந்து மாத்திரம் வந்துவிடுவதில்லை. அதற்கு நல்லாட்சியும் அனுபவமும்தான் தேவை. மக்களுடன் நெருங்கிப் பழகி, பிரச்சினைகளை நிர்வகிக்க வேண்டும். இதுதான் முன்னேற்றம். ஹார்வர்டு பல்கலைக்கழக படிப்பால் முன்னேற்றம் வராது. ஹார்டு வொர்க் (கடின உழைப்பு) மூலம்தான் முன்னேற்றம் வரும். நான் உழைக்க அஞ்சமாட்டேன்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் மதிக்கப்படும். சட்டங்கள் மதிக்கப்படும். நாடு முன்னேற்றம் அடையும். இங்கு பெரிய காட்சியைப் பார்க்கிறேன். தமிழ் மக்கள் இங்கு இவ்வளவு பெரிய கூட்டமாக கூடியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தை பார்க்கும் மற்ற மாநில மக்கள் ஊக்கம் அடைவார்கள். மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம்.. இதுதான் பாஜகவின் தாரக மந்திரம்.

பிரச்சினைகளுக்கு தீர்வும், உங்கள் கனவுகளை நனவாக்கவும், உங்கள் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவும், நம்முடைய தாய் தந்தையர், சகோதரர்கள் மரியாதையோடு வாழவும் ஒரே தீர்வு முன்னேற்றம். எனவே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னேற்றம், மேம்பாடு என்பதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்வோம்" என்றார் நரேந்திர மோடி.

இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினர்.

உற்சாக வரவேற்பு...

கூட்டத்தில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி இரவு 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடக்கும் விஜிபி மைதானத்துக்கு மோடி வந்தார். மேடையில் இருந்த கூட்டணி கட்சித் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

மேடையில் ஏறிய மோடி, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, 'வருங்கால பிரதமர் மோடி வாழ்க' என தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். மோடி வருகையையொட்டி வண்டலூர் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பாஜக வண்டலூர் கூட்டம்பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிசென்னையில் நரேந்திர மோடிமீனவர் பிரச்சினைநாடாளுமன்றத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x