Published : 09 Feb 2015 09:51 AM
Last Updated : 09 Feb 2015 09:51 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸை தயார்படுத்த ஆலோசனை: செயற்குழு கூட்டத்துக்கு பிறகு முகுல் வாஸ்னிக் தகவல்

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறினார்.

தமிழக காங்கிரஸின் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமை வகித்தார். இந்தக்கூட்டம் நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் நடந்தது. இந்தக்கூட்டம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பாஜக அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் மாநில அளவில் கட்சியை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் வரும் 9-ம் தேதி (இன்று) நடக்கவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 18,19,24,25 ஆகிய தேதிகளில் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும். இதுமட்டுமன்றி தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் காலியாகவுள்ள பொறுப்புகளை நிரப்பும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வழங்கி இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் முகுல் வாஸ்னிக் கூறுகையில், “ தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். இதன்படி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என்றார்.

இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மற்றும் விஜயதாரணி எம்.எல்.ஏ, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x