Published : 05 Feb 2015 09:13 AM
Last Updated : 05 Feb 2015 09:13 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக திமுக-வினர் 5 பேர் கைது

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக திமுக வைச் சேர்ந்த 5 பேரை தேர்தல் பறக்கும்படையினர் நேற்று கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 1,12,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநி யோகம் செய்ததாகக் கூறி திமுக வினரைத் தாக்கி, வாகனத்தை அதிமுகவினர் உடைத்து சேதப் படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் திமுகவினர் ஒரு காரில் வந்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் சிவசங்கரன் மற்றும் அவரது குழுவினர் சென்றனர்.

அங்கு வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக திருவண் ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி, தினகரன், ஆறுமுகம், ராமஜெயம் ஆகியோரிடமிருந்து ரூ.53,500 பறிமுதல் செய்ததுடன், அவர்களை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார், வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய சாலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக திமுக வைச் சேர்ந்த பத்மநாபன் என்ப வரை கைது செய்து, அவரிடமி ருந்து ரூ.59 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பத்மநாபனுடன் பண விநியோகத் தில் ஈடுபட்டு, தப்பியோடிவிட்ட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 5 பேரிடமும் ரூ.1,12,500-ஐ தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, தாக்குதல் மற்றும் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக அதிமுக கரை வேட்டி கட்டியிருந்த பெயர் தெரியாத 5 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு

இந்த சம்பவத்தையடுத்து ஸ்ரீரங்கம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன், மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட் டோர் வந்து விசாரணை மேற்கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x