Published : 24 Feb 2015 08:36 AM
Last Updated : 24 Feb 2015 08:36 AM

தொழில் தாவா சட்டத்தின் கீழ் ஐ.டி. நிறுவனங்கள் வருமா?- தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தாவா சட்டத்துக்கு கீழ் வருமா என்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய ஜன நாயக தொழிலாளர் முன்னணியின் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.கற்பகவிநாயகம் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது: ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 25 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைதான் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவரே ஒப்புக்கொண்டுள்ளார். இப்படி வேலை இழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். டிசிஎஸ் நிறுவனம் செலவினங்களை குறைக்கவே ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதற்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும்போது அவர்களை பணி நீக்கம் செய்ய தொழில் தாவா சட்டத்தின்படி முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் டிசிஎஸ் நிறு வனம் எந்த முன் அனுமதியுமின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஊழியர் சங்கங்களை அமைக்கவும் அந்நிறுவனம் அனுமதிக்கவில்லை. இதனால் ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த மிகப்பெரிய வேலைநீக்கம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சட்டத்துக்கு புறம்பாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களின் அடிப்படையில் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அனைத்து உரிமை களையும், உதவிகளையும் பெறு வது உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், “ஐ.டி. நிறுவனங்களை தொழில் தாவா சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகினார்களா? என்று கேட்டிருந்தோம். அவர்கள் கடந்த ஜனவரி 21-ம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியதாக கூறியுள்ளனர்.

இந்த சூழலில் ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தாவா சட்டத்தின் கீழ் வருமா அல்லது வராதா என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக மனு தாரர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒருவேளை ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தாவா சட்டத்தின் கீழ் வரவில்லை என்றால், தமிழக அரசு இப்பிரச் சினையில் கொள்கை சார்ந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கும். இதனை சட்டத்திருத்தங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம்” என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x