Published : 10 Apr 2014 10:35 AM
Last Updated : 10 Apr 2014 10:35 AM

முஸ்லிமாக மதம் மாறும் இந்து பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டு பலன்களைப் பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்து பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லி மாக மதம் மாறினால் பிற்படுத்தப் பட்டவர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற அவருக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முஸ்லிம் (லப்பை பிரிவு) மதத்துக்கு மாறினார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்ற அவருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.

பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தனக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்தப் பெண் கோரினார்.

ஆனால், இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவரைப் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்றும், பொதுப் பிரிவினராக மட்டுமே கருத முடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. கூறிவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள தனக்கு பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிலைய தீயணைப்பு அதிகாரியாகப் பணி நியமனம் வழங்கும்படி டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மனுதாரரான அந்தப் பெண்ணுக்கு இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற உரிமை உள்ளது என்றும், அவருக்கு நிலைய தீயணைப்பு அதிகாரி பணி வழங்கவேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட்டார்.

இந்து பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமாக மதம் மாறி அன்சார், மாப்பிளா, ஷேக், சயீது, லப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீட்டு பலன்களைப் பெறுவதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x