Published : 03 Feb 2015 04:29 PM
Last Updated : 03 Feb 2015 04:29 PM

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் துரோகம் இழைக்க கருணாநிதி முயற்சி: முதல்வர் ஓ.பி.எஸ். தாக்கு

'இலங்கை இறுதி கட்ட போரின்போது தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கருணாநிதி இப்போது இலங்கை அகதிகளுக்கும் துரோகம் இழைக்க முற்படுகிறார்' என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிருபிக்கப்படக்கூடிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டு சொந்த இடங்களுக்கு திரும்பக்கூடிய நம்பிக்கை உருவாக்கப்பட்ட பின்னரே, இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றி கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வர் நிலைப்பாட்டை சரமாரியாக விமர்சித்திருந்த கருணாநிதி "அகதிகள் பிரச்சனையில் அ.தி.மு.க அரசின் பொறுப்பற்ற செயல்!" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி அறிக்கைக்கு பதிலளித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "தனது அறிக்கையில் என்ன சொல்ல வருகிறோம் என்பது கருணாநிதிக்கு புரியாததால் அவர் தன்னையும் குழப்பிக் கொண்டு, பிறரையும் குழப்ப முற்பட்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

"இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், தாங்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், தற்போது அப்படி அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா? என்றே தெரியாத நிலையில்; இலங்கைக்கு திரும்பினால் என்ன நடக்கும்? என்பது தெளிவற்ற தெரியாத நிலையில் மத்திய அரசு இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, தமிழக அரசின் சார்பில் எவரும் கலந்து கொள்ளாதது சரியான நிலைப்பாடு தான் என்பதை கருணாநிதி ஒத்துக் கொண்டுள்ளார் என்பது தான் இதன் பொருள்.

ஆனால், அங்கு தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை அகதிகள் அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? என்று தெரியாத நிலையே உள்ளது என்று தெரிவித்துவிட்டு, ஆனாலும், மத்திய அரசு கூட்டிய அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல் என்று கூறுவது எத்தகைய இரட்டை வேடம்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்த 3,04,269 பேரில், 2,12,000 பேர் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்கனவே இலங்கைக்கு திரும்பியுள்ளனர். எனவே, தற்போது தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்புவதற்காக ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது எதற்கான கூட்டம் என்பது எவருக்கும் தெரியும். கருணாநிதிக்கும் அது புரியும். ஆனாலும், இலங்கை தமிழர்பால் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சி இன்னமும் தணியாத நிலையில் இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார் கருணாநிதி.

இலங்கை தமிழர் பல்லாயிரக்கணக்கானோர் 2009 ஆம் ஆண்டு கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்து, இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த கருணாநிதி தற்போது இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கும் துரோகம் இழைக்க முற்பட்டுள்ளார்.

கருணாநிதியின் கண் துடைப்பு நாடகங்கள்:

இலங்கையில் தமிழினத்தையே அழித்த சிங்கள வெறிபிடித்த முந்தைய இலங்கை அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது தி.மு.க.அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான். இலங்கை ராணுவத்தினருக்கு, இந்திய மண்ணில், இந்திய ராணுவம் ரகசியமாக போர் பயிற்சி அளித்தது, இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது, மிக நவீன ராணுவ ரேடார் கருவிகளை வழங்கியது, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் உயரதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்றது என பல செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளிவந்தன.

அத்தகைய தமிழின விரோத செயல்களுக்கு ஜெயலலிதா அப்போதே கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

ஆனால், மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ‘இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா’ என்ற அளவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர், மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து நாடகத்தை முடித்துக் கொண்டார். ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’ , ‘சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்’, ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்’, ‘மனிதச் சங்கிலிப் போராட்டம்,’ ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியிடம் அளித்தல்’, பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்ற அறிவிப்பு, டில்லியில் பிரதமருடன் சந்திப்பு, வேலை நிறுத்தம், பேரணி, என பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை நடத்திவிட்டு, இறுதியாக மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் கருணாநிதி.

அதன் பின்னர், லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் எவ்வித வசதியுமின்றி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அப்போதைய இலங்கை அரசால் கொடுமைப்படுத்தப்பட்ட போதும் கருணாநிதி தன் மகள் கனிமொழி உட்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அதிபரை சந்திக்க வைத்து, கைகுலுக்கி, விருந்து உண்டு, பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளச் செய்தார்.

பின்னர், பத்திரிகையாளர்களிடம் "முகாம்களில் தமிழர்கள் யாரும் சித்ரவதை செய்யப்படவில்லை" என்று பேட்டி அளித்து மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றினார். இலங்கை தமிழர்களுக்கு எதிராக இவ்வளவையும் செய்த திரு.கருணாநிதி, தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் நன்மைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசின் நல்லிணக்கம் மற்றும் மறுகுடியமர்த்தல் ஆகிய நல்லெண்ணங்கள் செயலாக்கப்பட்டதற்குப் பின்னரே, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்ற இந்த அரசின் முடிவு எப்படி பொறுப்பற்ற செயல் ஆக இருக்க முடியும்? இங்கே உள்ள இலங்கை அகதிகளின் மீது இந்த அரசுக்கு உள்ள பொறுப்பின் காரணமாகத் தான் இது போன்ற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன், சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த போது, வாரம் இரு முறை வெளிவரும், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் "இது வரை கிழக்கு மாகாணம் உள்பட பல இடங்களில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை இருந்தது. பல இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருந்தனர். இந்த நிலைமைகளையெல்லாம் மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கம் முடிவெடுக்கிறது. ஆரம்ப கட்டமாக தமிழர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். விரைவாக குடியேற்றம் நடைபெற உள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த மக்களை அழைத்து குடியமர்த்த உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதைத் தான் மத்திய அரசுக்கு நாங்களும் சொல்லி இருந்தோம். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். அதன் பின்னரே, இங்கேயுள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி எவரும் சிந்திக்க இயலும்.

"கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து"

என்ற திருக்குறளை கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x