Last Updated : 23 Apr, 2014 12:00 AM

 

Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

கடலூரில் கரையேறப்போவது யார்

பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த கடலூர் தொகுதியைக் கைப்பற்ற இம்முறை கடும் போட்டி நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 முனைப் போட்டியில் கடலூர் வாக்காளர்கள் மவுனப் புரட்சி செய்யத் தயாராகி உள்ளனர்.

கடலூரை கைப்பற்றிய கட்சிகள்

இத்தொகுதியைப் பொறுத்த வரை 7 முறை காங்கிரஸூம், 4 முறை திமுகவும், தலா ஒரு முறை தாமக, அதிமுக மற்றும் சுயேட்சை ஆகியவை வென்றுள்ளனர். தற்போதைய எம்பியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி உள்ளார். இவர் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர்கள் விபரம்

6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய கடலூர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 பேர். இவற்றில் ஆண்கள், 6 லட்சத்து 22 ஆயிரத்து 460 பேர், பெண்கள் 6 லட்சத்து 22 ஆயிரத்து 146 பேர். திருநங்கைகள் 42 பேர்.

தற்போதைய கள விபரம்

இம்முறை களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 6 வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் 2 வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்களாக 9 பேர் களத்தில் உள்ளனர். ஆனால் 2009 தேர்தலில் 11 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

கடலூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இங்கு இயங்கும் சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் அவதியுறும் கடலூரை சுற்றியுள்ள கிராம மக்கள், படு மோசமான நிலையில் உள்ள சாலைகள், கிராமப் புறங்களுக்கான போக்குவரத்துக்கு வசதியின்மை, பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் இயங்கும் நகரப் பேருந்துகள், ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகள், அறிக்கப்பட்ட நிலையிலேயே உள்ள புதுச்சேரி-கடலூர்-நாகை கடற்கரை சாலை, கடலூர் நகர புறவழிச்சாலை, மாவட்டத் தலைநகருக்குண்டான பேருந்து நிலையம் இல்லாதது, ஆறுகளின் வழியாக வீணாகக் கடலில் கலக்கும் வெள்ளநீரை சேமிக்க போதிய தடுப்பணை மற்றும் கதவணைகள் ஏற்படுத்தாதது, பெருமாள், வெலிங்கடன் ஏரி ஆகியவை தூர் வாரப்படாதது, வறுமையில் வாடும் முந்திரி விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்படாதது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எதிர்நோக்கியுள்ளனர் கடலூர் வாக்காளர்கள்.

வாக்காளர்களின் எதிர்பார்ப்பு

மானாவாரி நிலப்பகுதியாக உள்ள திட்டக்குடி, விருத்தாசலம் பகுதியில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வரும் வேளையில் மாற்று வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். புதுச்சேரி-கடலூர் இடையே ரயில் போக்குவரத்திற்கான ரயில்பாதை அமைத்து,கடலூர்-புதுச்சேரி-திருப்தி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும், சென்னை-கடலூர்-மயிலாடுதுறை மார்க்கத்திலும் கடலூர்-சேலம்-திருச்சி மார்க்க த்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும். துறைமுகத்தை ஆழப்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை செழுமைப்படுத்தி, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள ஆறுகளான தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு மூலமாக வெள்ள நீர் கடலுக்குச் செல்கிறது. இதை முறையாக தேக்கி வைக்க எவ்வித உருப்படியான திட்டமும் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரையே நம்பி இருக்கவேண்டியுள்ளது. மேலும் கடலூர் பகுதி கடற்கரைப் பகுதியிலிருந்து கடல் நீர் கெடிலம், வெள்ளாறு வழியாக ஊருக்குள் வருகிறது. ஆறுகளில் ஆங்காங்கே கதவணைகளும், பின்னர் தடுப்பணைகளும் கட்டவேண்டும், முந்திரி, பலா விவசாயத்திற்கு பெயர்போன பண்ருட்டியில், உற்பத்தி சார்ந்த தொழிலை மேம்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதான மாக எதிரொலிக்கின்றன

வாக்காளர்களின் வாக்கு யாருக்கு

கடலூர் தொகுதியில் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என 5 முனைப்போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்தத் தேர்தலில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் களமிறங்கிய அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் பெற்ற 2 லட்சத்து 96 ஆயிரத்து 941 வாக்குகளைக் காட்டிலும், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியோடு களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி 3 லட்சத்து 20 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று, 23 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தனித்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 93 ஆயிரத்து 161 வாக்குகள் பெற்றார். இம்முறை பாமக, மதிமுக, பாஜக ஆகிவற்றின் துணையுடன் தேமுதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் துணையோடு திமுகவும், அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியவை தனித்தும் போட்டியிடுகின்றன.

இதில் கடந்தமுறை வென்ற காங்கிரஸ் வேட்பாளர் தற்போது தனித்து போட்டியிட்டாலும், தொகுதி சார்ந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து செயலாற்றிய வகையிலும், மத்திய நிதியமைச்சரிடம் தனக்கிருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கல்விக் கடன், தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 7 ஆண்டு வட்டிச் சலுகையுடன் கடன் வசதி, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி என தொகுதி பிரச்சினைகளில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது போன்றவை அழகிரிக்கு பலத்தைக் கொடுத்தாலும், கூட்டணி என்ற மிகப்பெரிய பலம் இல்லாதது இவருக்கு மைனஸ்.

மூத்த தொழிற்சங்கத் தலை வரான கு.பாலசுப்ரமணியத்தை களமிறக்கியுள்ள காம்ரேட்டுகள், முதன்முறையாக கடலூரில் தங்களது பலத்தை அரிய ஆவலோடு உள்ளனர். இவருக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களாகக் கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் வாக்குகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கணிசமான வாக்குகளை பெறக்கூடும். இவர் கம்யூனிஸ்டுகளின்ப லத்தை வெளிப்படுத்துவதோடு, அதிமுகவினரையும் கவலையடையச் செய்வார் என்பது திண்ணம்.

கடந்தமுறை கூட்டணிப் பலத்துடன் மோதிய அதிமுக தற்போது அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்ற பெயர்பெற்ற கடலூர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த அருண்மொழித்தேவன் என்பவரை களமிறக்கியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு கிடைத்த கூட்டணி வாக்குகளில் பெரும்பாலனவை, தேமுதிக கூட்டணிக்கு செல்வதோடு, கம்யூனிஸ்ட் வாக்குகள் இல்லாததும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சத்தின் காரணமாக வாக்காளர்களின் வீடு தேடி அதிமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரித்துள்ளனர். இருப்பினும் இவை எந்த அளவிற்கு இலைக்கு தெம்பு அளிக்கும் என்பது தெளிவாகவில்லை. காரணம் வாக்காளர்களின் முகம் சுளிக்காத அளவிற்கு முரசும் முறையாக கவனிப்பதால், முரசின் சத்தம் இலையை அதிர வைத்துள்ளது.

கடந்த முறை தனித்து நின்று 93 ஆயிரம் வாக்குகள் பெற்ற தேமுதிக இந்த முறை பாமக, மதிமுக, பாஜக என்ற கூட்டணி பலத்துடன், இலைக்கு சவால் விடும் வகையில் வாக்குறுதிகளை அள்ளிவீசும் ஜெய்சங்கர் என்ற இளைஞரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. விஜயகாந்திற்கென தனி செல்வாக்கு பெற்ற மாவட்டமான கடலூரில் இலைக்கு இணையாக இவரது களப்பணியும், கடந்த முறை அதிமுக வாக்களித்த பாமக, மதிமுகவினர் வாக்கு மட்டுமின்றி, மோடி என்ற வார்த்தை ஜாலமும், முரசை மீசை முறுக்க வைத்துள்ளது.

கஜினி வாரிசு

கஜினி முகமதுவின் வாரிசு என எதிர்கட்சி வேட்பாளர்களால் நகைச்சுவையோடு உச்சரிக்கப்படும் திமுக வேட்பாளர் நந்தகோபால கிருஷ்ணனுக்கு, அனுதாப அலை வீசுகிறது. தோல்வியை சந்தித்து பழக்கபட்டவருக்கு விடுதலைச்சிறுத்தைகள் பலம், சிறுபாண்மையினர் பலத்துடன் திமுக வாக்கு வங்கியுடன் தெம்பாக இருக்கிறார். கூடுதலாக பாமகவினரின் அருப்தி வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x