Published : 28 Feb 2015 05:38 PM
Last Updated : 28 Feb 2015 05:38 PM

மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட்: விஜயகாந்த்

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களின் தேவையை முழுமையாக பிரதிபலிக்காத பட்ஜெட் இது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.

நாட்டின் பண வீக்கம் 2012ல் 11% சதவிகிதத்திற்கு மேல் இருந்து, தற்போது ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளதையும், அன்னியச் செலாவணி 340 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்பதையும், 2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் நகர்ப் புறத்தில் இரண்டு கோடி வீடுகளும், கிராமப் புறத்தில் நாலு கோடி வீடுகளும் அமைக்கப்படும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை வழங்கப்படும் என்பதும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்படும் என்பதும், மேக்-இன்-இந்தியா திட்டத்தின் படி அனைத்து ராணுவ தளவாடங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பதும், 2020க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கப்படும், 2022க்குள் 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செயப்படும் என்பதும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதாகும்.

தனிநபர் விபத்துக் காப்பீடு

தமிழகத்தில் சாலை வசதி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது தான் வாகன விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாகும். அதனால் தான் இந்தியாவிலேயே வாகன விபத்தால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன. ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தற்போது பனிரெண்டு ரூபாய் செலுத்தினால், இரண்டு லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத்திட்டதை அறிவித்திருப்பது வரவேற்கக்கூடிய திட்டமாகும். ஆனாலும் தமிழ்நாட்டில் அதிமான விபத்துக்கள் நடக்காமலும், உயிரிழப்புகள் ஏற்படாமலும் இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.

நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்களும், அரசு அலுவலர்களும் பயன் பெரும் வகையில் வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழை எளிய, நடுத்தர மக்கள் என அனைவருக்கும் விதிக்கப்படும் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு(corporate sector) ஏற்கனவே அவர்கள் செலுத்திய வரியில் இருந்து ஐந்து சதவிகிதம் குறைக்கப்பட்டும், சொத்து வரியும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது, என்பது போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இந்த அரசு அமையக் காரணமாக இருந்த ஏழை எளிய, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையிலான அறிவிப்புகளாக இவை தெரியவில்லை.

நதிகள் இணைப்பு திட்ட அறிவிப்பு இல்லை

கங்கை நதியை தூய்மைப்படுத்த வரிவருமானத்தில் ஒரு பங்கு பயன் படுத்தப்படும் என்றும், அத்திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும், அதே போல் தூய்மை இந்தியா திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும். ஆனால் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து எந்த வித அறிவிப்புகளும் இல்லை, குறிப்பாக கங்கை-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து கூட எந்த வித அறிவிப்பும் இல்லை என்பது மிக்க வருத்தத்தை அளிக்கிறது.

கல்விக்கடன் ரத்து இல்லை

விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்ற இலக்கு வரவேற்புக்குரியது. அதே சமயத்தில் கடந்த ஆட்சியின் பொருளாதார கொள்கையால் விவசாயம் நலிவுற்று, விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் வேதனையை தீர்க்கும் வகையில் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். இந்தியா முழுவதும் படித்த மாணவர்கள் உரிய வேலை வாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் படிப்பிற்காக வாங்கிய கல்விக்கடன் தொகைகள் அவர்கள் தலையின் மேல் சுமையாக உள்ளது. படிப்பு முடித்த குறிப்பிட காலத்திற்குள் கல்விக்கடன் தொகையை செலுத்த வேண்டுமென அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. வேலை வாய்ப்பில்லாமல் அவர்களால் கல்விக்கடன் தொகையை எப்படி திரும்பச் செலுத்த முடியும்? மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கடன் தொகைகள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்தியாவில் அரசுப்பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது, காலிப் பணி இடங்களுக்கும் உடனுக்குடன் பணி நியமனம் செய்யப்படுவதில்லை, ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்துவிட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை தேடிவருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக சுயவேலை வாய்ப்பை பெருக்கிட இன்னும் அதிக தொகைகளை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். மலையளவு தேவைப்படும் தொகைக்கு, கடுகளவு தொகையே அதாவது ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கான புதிய திட்டங்களும் இல்லை, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழிவகையும் காணப்படவில்லை. ஆகமொத்தத்தில் மக்களின் தேவையை, முழுமையாக பிரதிபலிக்காத பட்ஜெட் இது.'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x