Published : 25 Feb 2015 09:41 AM
Last Updated : 25 Feb 2015 09:41 AM

தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்

தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற வளர்ச்சி, வாகனப் பெருக்கம் உள்ளிட்ட காரணங் களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து, சூழலில் சமன்பாட்டை நிலைநிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர் வையை மேம்படுத்தவும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட் டது.

அதன்படி, கடந்த 23.2.2012 அன்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்றை நட்டு தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டில் 65 லட்சம் மரக்கன்று களும், 2014-ல் 66 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்த ஆண்டும் வனத்துறை சார்பில் ரூ.53.72 கோடி மதிப்பீட்டில் மாவட்டத்துக்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 375 மரக்கன்றுகள் வீதம், தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் வில்வ மரக்கன்றை நட்டு தொடங்கிவைத்தார்.

இந்த பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். மரக்கன்றுகள் வனப்பகுதி களிலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், சாலையோரங்கள் மற்றும் பூங்காக்களில் நடப்பட்டு பராமரிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆலம், அரசு, பாதாம், புன்னை, மகிழம், சிவகுண்டலம், பூவரசு, பாறை, நாவல், வில்வம் போன்ற வறட்சியை தாங்கக்கூடிய மரக்கன்றுகள் நடப்படும்.

சென்னையில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வினோத் குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் ப.தனபால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி, சட்டப்பேரவை உறுப்பினர் எம்கே.அசோக், தமிழ்நாடு ஜவுளிக் கழகத் தலைவர் விருகை வி.என்.ரவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x