Published : 10 Jan 2015 13:36 pm

Updated : 10 Jan 2015 13:36 pm

 

Published : 10 Jan 2015 01:36 PM
Last Updated : 10 Jan 2015 01:36 PM

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு விடியல்: கருணாநிதி நம்பிக்கை

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, இனியாவது ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு விடியல் வெளிச்சம் ஏற்படத் தொடங்கும் என்று நம்புவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வியடைவது கண்டு, மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல. எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளாம்


ஈழத் தமிழர்களை மிருகத்தனமாக வேட்டையாடிய ராஜபக்சயின் தோல்வி நமக்கு ஒருவகை நிறைவையே தருகிறது என்பதால் வரவேற்கலாம். இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல் களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்போதுதான் இயற்கை நீதி முழுமை பெறும்.

கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த தவிர்த்திட இயலாத முடிவு சரித்திரத்தின் சாகாத படிப்பினையாகப் பதிவாகியிருந்தும், அதைப் புறக்கணித்து, பெரும்பான்மை சிங்கள இன வெறியோடு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரச் சேட்டைகளை, தொடர்ந்து நடத்திய ராஜபக்ச அடைந்திருக்கும் தோல்வி அறிந்து சர்வ தேசத் தமிழ்ச் சமூகத்தினரும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தமிழர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவரின் பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனா, தன்னுடைய வெற்றிக்கான அடிப்படைக் காரணத்தை மறவாமல், பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பாகுபாட்டினை அகற்றி, அனைவரும் குடிமக்களே - சமமானவர்களே என்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு வழி திறக்கவும், சமத்துவம், சமதர்மம், சமாதானச் சகவாழ்வு பேணவும், அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்திற்கும் அதிகமாகவே அதிகாரங்களைத் தருவதாக முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும், ஈழத் தமிழர்கள் அனைத்துரிமைகளுடன் கூடிய கண்ணியமான வாழ்க்கை நடத்திட வழிவகுக்க வேண்டும்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதுடன் இப்பகுதிகளைச் சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப் பெறவும், சிங்கள மயமாக்கலைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களையும், வீடுகளையும் திரும்ப ஒப்படைக்கவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மீண்டும் தாயகத்திற்குத் திரும்பி அமைதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. விசாரணைக் குழுவினை அனுமதித்திடவும், வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பொம்மை அரசாக இல்லாமல் தேவையான அதிகாரங்களைக் கொண்ட பொறுப்புள்ள அரசாக மாற்றியமைத்திடவும், தமிழ் மொழியை சிங்கள மொழிக்கு இணையான ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்திட வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, 1950களிலிருந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளுக்கும், நல்வாழ்வுக் கும் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முறையில் வலியுறுத்துகிறேன். இனியாவது ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு விடியல் வெளிச்சம் ஏற்படத் தொடங்குமென்று நம்புவோமாக" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைதிமுககருணாநிதிஇலங்கை அதிபர் தேர்தல்ராஜபக்சசிறிசேனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author