“பாஜகவின் 30 எம்எல்ஏ-க்கள் பேரவைக்கு செல்வார்கள்” - நயினார் நாகேந்திரன் கணிப்பு

“பாஜகவின் 30 எம்எல்ஏ-க்கள் பேரவைக்கு செல்வார்கள்” - நயினார் நாகேந்திரன் கணிப்பு
Updated on
2 min read

பாஜகவில் இருந்து 30 எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள் என்றும், கடவுள் நினைத்தால் அமைச்சராகவும் வரலாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலபொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,மேலிட பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘பாஜகவில் இருந்து 20, 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள்.

உண்மையில் அது நடக்கவும் போகிறது. அமைச்சர்களாக கூட வருவார்கள். கடவுள் நினைத்தால் நிச்சயமாக நடக்கும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்து விட்டார்கள். திமுகவுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. ஓட்டை பற்றி மட்டுமே கவலை,’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது இருக்கும் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இது மக்களுக்கான ஆட்சி இல்லை. சட்டம் ஒழுங்கு சரி இல்லை.

ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். புத்தகம் தூக்க வேண்டிய மாணவர்கள் கஞ்சாவையும், கத்தியையும் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. திமுக அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை.

திமுகவை பொறுத்தவரை நோட்டை கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என இருக்கிறார்கள். முதல்வரிடம் ஆட்சி நடத்துவதற்கான திறமை இல்லை.

சாத்தான்குளத்தில் ஒரு லாக்-அப் மரணம் நடந்ததற்கு திமுக போராட்டம் நடத்தியது. ஆனால், இன்று அவர்களது ஆட்சியில் 34 லாக்-அப் மரணங்கள் நடந்திருக்கிறது.

நிச்சயமாக எங்களுடைய ஆட்சி அமையும். அப்போது எல்லாம் சரி செய்யப்படும். கூட்டணி ஆட்சி என்ற பிடிவாதம் எங்களிடம் இல்லை.

திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களது ஒரே இலக்கு. பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு தான், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

“பாஜகவின் 30 எம்எல்ஏ-க்கள் பேரவைக்கு செல்வார்கள்” - நயினார் நாகேந்திரன் கணிப்பு
மோடி, நெதன்யாகு முன்னிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in