

பழநி: பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற 3 காவலாளிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட செக்யூரிட்டி நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு பழநி வந்த வெளியூர் பக்தர்கள் 3 பேர், தனியார் காவலாளிகள் 2 பேரிடம் விரைவு தரிசனம் குறித்து கேட்டுள்ளனர். இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொண்ட காவலாளிகள், கோயிலில் இருந்த மற்றொரு காவலாளி மூலம் விரைவாக தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த பக்தர்களின் உறவினரான கோயில் பணியாளர் ஒருவருக்குத் தெரியவந்தது. தகவலறிந்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், காவலாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து காவலாளிகள் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும், சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.