Published : 27 Jan 2015 10:32 AM
Last Updated : 27 Jan 2015 10:32 AM

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தாவரங்களின் அரிய புகைப்பட கையேடு: பல்லுயிர் பரவல் வாரியம் வெளியிட முடிவு

தமிழகத்தில் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தாவரங்களின் புகைப்படங்களுடன் கூடிய கையேட்டை தயாரிக்க தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியம் திட்டமிட்டுள்ளது.

உலகில் உள்ள தாவரம் மற்றும் விலங்கினங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருந்து வருகின்றன. இதை பல்லுயிர் சுழற்சி என்கிறோம். அந்த வகையில் ஓர் உயிரினம் அழிந்தால், அதன் விளைவாக அதைச் சார்ந்திருக்கும் மற்றொரு உயிரினமும் அழியும் நிலை ஏற்படும். இதை உலக நாடுகள் கடந்த 1980-ல் உணர்ந்து, பல்லுயிர் பரவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

உயிர்கள் அழிந்தால் உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்த உலக நாடுகள், கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு பல்லுயிர் பரவல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் பல்லுயிர் பரவலை பாதுகாக்க, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் தேசிய பல்லுயிர் பரவல் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில பல்லுயிர் பரவல் வாரியங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் உள்ள உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பல்லுயிர் பாதுகாப்பில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் சுமார் 22,877 சதுர கி.மீ. பரப்பளவில் வனங்கள் உள்ளன. இது தமிழக புவி பரப்பில் 17.59 சதவீதம். தமிழகத்தில் வனப்பரப்பு குறைவாக இருந்தாலும், இந்திய அளவில் தாவரங்களின் வகைகளில் அதிக அளவு தமிழகத்தில்தான் உள்ளன.

இதைப் பாதுகாக்க சென்னையில் அண்மையில் நடைபெற்ற பல்லுயிர் பரவல் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில், உள்ளூர் பூக்கும் தாவரங்கள் குறித்து புகைப்படத்துடன் கூடிய கையேட்டை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில பல்லுயிர் பரவல் வாரிய உறுப்பினர் செயலர் ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்ததாவது:

இந்தியாவில் மொத்தம் 16,809 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 5,674 வகை தாவரங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு தாவரங்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டுமே வளரக்கூடிய, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 270 அரிய வகை தாவரங்களும் உள்ளன. அதனால் தமிழகத்தில் உள்ள தாவர வகைகளை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்ளூர் பூக்கும் தாவரங்களின் படங்கள் இடம்பெற்ற கையேட்டை தயாரிக்க இருக்கிறோம். இந்த கையேடுகளை வனத்துறை அலுவலர்களுக்கு வழங்கி, அந்தத் தாவரங்கள் வளர்ந்து வரும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை பாதுகாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x