Published : 16 Jan 2015 11:38 am

Updated : 16 Jan 2015 11:38 am

 

Published : 16 Jan 2015 11:38 AM
Last Updated : 16 Jan 2015 11:38 AM

முன்னோர்கள் அருளும் ஆசி

தை அமாவாசை - ஜனவரி 20

முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில், முந்தைய தலைமுறையினரைக் குறித்து அறிந்திருத்தல் சாத்தியமில்லாமலேயே இருக்கிறது. ஆனாலும் அம்முன்னோர்கள் தன் குலத்தினருக்கு ஆசி வழங்குவதை நிறுத்துவதில்லை. பிள்ளைகள் செய்யும் தர்ப்பணத்தினால் பித்ருக்கள் உயர்நிலையை அடையும் பொழுது, அவர்களின் ஆசிர்வாதம், அக்குடும்பத்தினரை வந்து அடைகிறது.

தன் முன்னோர்களுக்கு ஆண் வாரிசு கள் தர்ப்பணம் அளிக்கலாம் என்பதே பெரும்பான்மையும் உள்ள பழக்கம். நீர் நிலைகளில் குளிக்கும்போது பெண்கள் இரு கைகளில் நீரை வாரி எடுத்து, இரு உள்ளங்கையின் இடையில் உள்ள இடைவெளியின் வழியாக வழியவிட்டு, இறைவனுக்காக அந்நீரினை விடலாம். பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததே இந்த ஜீவாத்மா. அதனால் பகவத் கீதையில் கண்ணபிரான், பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என எதைக் கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்வேன் என்று கூறுகிறார்.


மூதாதையர்களுக்குப் படைக்க, பெரியளவில் சமைக்க வசதி இல்லாவிட்டாலும், ஒரு இலையாவது (பத்ரம் என்றால் இலை) எனக்காகக் கொடுப்பாயா? என்றார். இலை கிடைக்கவில்லையா ஒரு பூ, அதுவும் கிடைக்கவில்லை என்றால், ஒரு பழம் நிவேதனம் செய்யலாம். ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் போதும் என்கிறார். அதுவும் முடியவில்லையா நிறைந்த பக்தியால் ஒரு துளி நீர் கண்ணில் தோன்றினாலும் அதுவும் தனக்கு உகந்ததே என ஏற்கிறார். ஆதி முதல்வனாம் நாராயணன் பக்தர்கள் உய்ய பல வழிகளைக் காட்டுகிறார். முன்னோருக்குத் தர்ப்பணம் அளிப்பது என்பது, அக்குலத்தில் பிறந்ததால் ஒவ்வொருவருக்குமான பிறவிக் கடமை. மூத்தார் கடன் நீத்தல் என்னும் இக்கடமையைச் செய்தால் இனிய நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

தர்ப்பணம் செய்யும் நாட்கள்

ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதில் தை மற்றும் ஆடி மாத அமாவாசைகள் புனித நாட்களாகக் கருதப்பட்டு, தர்ப்பணத்திற்குப் பின்னர் பாயசம், வடை தயாரித்து படைப்பது உண்டு. இறைவன் கண் விழிக்கும் மாதம் மார்கழி என்றாலும் கல்யாணம், பண்டிகை போன்ற விழாக்கோலம் கொள்ளும் மாதம் தை. இந்த மாதத்தில் வரும் அமாவாசை திதியன்று, நீர்நிலை களான கடல், நதி, ஆறு, குளம், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள புனித கிணறு உள்ளிட்ட இடங்களில் ஸ்நானம் செய்து, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் அளிக்க வேண்டும். இந்நாட் களில் செய்யப்படும் இந்தத் தர்ப்பணம் நேரிடையாக முன்னோர் களைச் சென்றடைவதாக நம்பிக்கை உண்டு.

தாய், தந்தையர் தொடங்கி முன்னோர்களை எண்ணி இதனைச் செய்ய வேண்டும். பெற்றோர் இருப்பவர்கள், இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம். அன்றைய தினம் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுத்தால் புண்ணியம் பல மடங்காகக் கிடைக்கும் என்பார்கள்.

கடலாடுதல்

சங்க இலக்கியங்களில் தை நீராட்டம் என்ற நிகழ்ச்சி காணக் கிடைக்கிறது. இது குறிப்பாகக் கடல், ஆறு போன்ற பொது நீர்நிலைகளில் மக்கள் தங்கள் குடும்ப சகிதமாக வந்து, ஸ்நானம் செய்து இறைவனை வேண்டுவர். கடல் ஸ்நானத்திற்கு புகழ் பெற்ற இடம் ராமேசுவரம். தை அமாவாசையன்று அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் அருள்மிகு ராமநாத சுவாமி. இவர் அக்னி தீர்த்தத்தை அடைந்து அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முன்னதாக இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேசுவரம் வந்து, கடலில் புனித நீராடி, கடற்கரையில் தர்ப்பணம் முடித்து இறை தரிசனத்திற்காகக் காத்திருப்பார்கள்.

அன்றைய தினம் பல ஆலயங் களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெறும். குறிப்பாகத் திருநெல் வேலி நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசையன்று, லட்சத் தீபம் ஏற்றி காந்திமதி சமேத நெல்லையப்பரை வணங்குவர்.

அபிராமி அம்மை

பக்தனின் மானம் காக்க அமாவாசையை பெளர்ணமி ஆக்கிக் காட்டியவள் அபிராமி. அந்த மாண்பினை விளக்கும் காட்சி பல சிவாலயங்களில் காண்பிக்கப்படும். குறிப்பாகத் திருக்கடையூரில் கோயில் கொண்டுள்ள அபிராமி அம்மை சந்நிதியில் காட்சிப்படுத்தப்படும்.

அன்னதானம்

தானத்தில் உயர்ந்தது அன்னதானம். அதிலும் தை அமாவாசை போன்ற நன்னாட்களில் அன்னதானம் செய்தால் பலன் பன்மடங்காகும். பசுவிற்கு அகத்திக்கீரை தருதல் முப்பது முக்கோடி தேவருக்கும் தானம் அளித்த பலனைத் தரும். மேலும் பசுவுக்கு வாழைப் பழம் அளிக்கலாம். அன்றைய தினம் எள் உருண்டை, எள் சாதம் ஆகியவற்றை ஆஞ்சனேயருக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம். வாழ்வில் தனிச் சிறப்பு பெற அவசியம் செய்ய வேண்டும் தை அமாவாசை அன்னதானம்.

அமாவசை தர்ப்பணம்முன்னோர்கள் ஆசிதை அமாவாசைதிதிமுன்னோர்கள் வழிபாடு

You May Like

More From This Category

More From this Author