Published : 11 Jan 2015 11:24 AM
Last Updated : 11 Jan 2015 11:24 AM

பார்வை குறைபாடுள்ள ஐஐடி மாணவனுக்கு செயற்கை லென்ஸ்: அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

பார்வை குறைபாட்டால் பாதிக் கப்பட்ட சென்னை ஐஐடி மாணவனின் கண்களில் நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை லென்ஸ்கள் பொருத்தி, சென்னை அகர்வால் கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் சவுத்ரி(19). ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், ஐஐடி-யில் சேருவதற்கான அகில இந்திய நுழைவு தேர்வில் 27-வது ரேங்க் எடுத்து சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு பிடெக் மெக்கானிக்கல் படித்து வருகிறார். வகுப்பறையில் பாடப் புத்தகங்களை கண்களுக்கு மிகவும் அருகில் வைத்து படித்து வந்துள்ளார். இதனை கவனித்த ஆங்கில ஆசிரியர் மஞ்சுளா ராஜன், காரணம் கேட்டுள்ளார். தனக்கு கண்களில் பார்வை குறைபாடு இருக்கிறது. பாடப் புத்தகங்களை தூரமாக வைத்தால் தெரியாது என்று மாணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவன் ஆஷின் சவுத்ரி, சிகிச்சைக்காக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மாணவனின் இரண்டு கண்களிலும் கருவிழி சிறிய சேதம் ஏற்பட்டு இருப்பதும் மற்றும் லென்சில் குறைபாடு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் தலைமை யிலான டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலமாக மாணவனின் இரண்டு கண்களிலும் கருவிழியை சரிசெய்து, குறை பாடான லென்ஸ் களை அகற்றினர். அதன்பின், மாணவனின் கண்களில் செயற்கை லென்ஸ்களை (குளூட் ஐஓஎல் தொழில்நுட்பம்) வெற்றிகரமாக பொருத்தினர். அறுவை சிகிச்சைக் கான செலவுகளை, சென்னை ஐஐடி நிர்வாகம் ஏற்றது.

இதுதொடர்பாக டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:

மாணவன் ஆஷிஷ் சவுத்ரிக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருந்திருக்கிறது. இரண்டு கண்களிலும் பாதி பார்வைதான் உள்ளது. ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் கஷ்டப்பட்டு படித்து ஐஐடி அகில இந்திய நுழைவுத் தேர்வில் 27-வது ரேங்க் எடுத்துள்ளார். இது உண்மையாகவே மிகப்பெரிய சாதனையாகும். கண்களில் செயற்கை லென்ஸ்கள் பொருத்திய பிறகு, மாணவனின் கண்களில் இருந்த பார்வை குறைபாடு நீங்கியுள்ளது. மற்ற மாணவர்களை போல, இவராலும் உலகை நன்றாக பார்க்க முடிகிறது. இனிமேல் ஆஷிஷ் சவுத்ரி எல்லா தேர்வுகளிலும் முதல் ரேங்க்தான் எடுப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x