Published : 21 Jan 2015 09:28 AM
Last Updated : 21 Jan 2015 09:28 AM

சென்னையில் காப்பீடு ஆலோசகர்கள் மாநாடு: யுனைடெட் இந்தியா நிறுவனம் நடத்தியது

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ‘மெகா காப்பீடு ஆலோசகர்கள் மாநாடு’ சென்னையில் நடைபெற்றது.

நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட 450 இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மிலிண்ட் காரத் தலைமை வகித்து பேசும்போது, நிறுவனத்தின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி, இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை காப்பீடு செய்தால் 2-3 ஆண்டுகளுக்கு பயன்பெறலாம். மேலும் நீண்ட கால பாலிசி எடுப்பதால் குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதும் என்று விளக்கினார். பின்னர் மருத்துவ காப்பீடு தொடர்பான கையேட்டை அவர் வெளியிட்டார்.

மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் ஐஷ் குமார் பேசும்போது, நாட்டில் காப்பீட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினார். மற்றொரு பொது மேலாளரான ஹேமமாலினி, காப்பீடு செய்வதன் அவசியத்தை விளக்கி கிராமப்புறங்களிலும் காப்பீடு செய்யும் வழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.

சென்னை மண்டல அலுவலக பொது மேலாளர் அலமேலு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மாநாட்டின் நோக்கம் குறித்து துணை பொது மேலாளர் கே.பி.விஜய் நிவாஸ் விளக்கினார்.

காப்பீட்டுத் துறை குறித்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவடி, டி.ஆர்.பி.சி.சி. இந்து கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x