Last Updated : 02 Jan, 2015 10:30 AM

 

Published : 02 Jan 2015 10:30 AM
Last Updated : 02 Jan 2015 10:30 AM

திறந்தவெளி கழிப்பிடமான செங்கல்பட்டு பேருந்து நிலையம்: தேவையற்ற இடத்தில் பயன்பாடற்ற ‘நம்ம டாய்லெட்’ திட்டம்

செங்கல்பட்டில் நம்ம டாய்லெட் திட்டத்தை மக்கள் கூடும் பேருந்து நிலையத்தில் அமைக் காமல் அவசியமில்லாத இடத்தில் அமைத்துள்ளதாகவும் இதனால் திட்ட நிதி வீணடிக் கப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இங்குள்ள நகராட்சி கழிப்பறையில் கட்டணமாக ரூ.7 வசூலிக்கப்படுவதாக கூறப் படுகிறது. இதனால் பயணி கள் பேருந்து நிலைய சுற்றுச்சுவர் பகுதியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதன் காரணமாக எப்போதும் துர் நாற்றத்தின் பிடியிலேயே பேருந்து நிலையம் இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு வரும் பயணிகள் சுகாதார சீர்கேடுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்துவதற் காக ‘நம்ம டாய்லெட்’ திட்டத் தின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் டாய்லெட் ஷெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அவசியமான இடத்தில் நிறுவு வதற்கு பதிலாக குண்டூரில் ஏற்கெனவே நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வரும் கழிப்பறைக்கு அருகிலேயே வைத்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற் கான பணிகளும் இதுவரை முடிக்கப்படாததால் ‘நம்ம டாய்லெட்’ கடந்த 8 மாதங்களாக உபயோகமின்றி வீணாகி வருகிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் கட்டண கழிப்பறை குத்தகைதாரர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தேவைப்படாத இடத்தில் ‘நம்ம டாய்லெட்’ கழிப்பறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குண்டூர் பகுதி மக்கள் கூறும்போது, ‘குண்டூரில் நகராட்சி கட்டணக் கழிப்பறையின் பக்கத்தில் நம்ம டாய்லெட்டை அமைத்துள்ளனர். 6 மாதங்களாகியும் இப்பணிகள் முடிக்கப்படவில்லை. திட்டத் துக்கான நிதியும் வீணடிக்கப் பட்டுள்ளது. எனவே எங்கு தேவை என்பதை அறிந்து ‘நம்ம டாய்லெட்டை’ அமைக்க நகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பயணிகள் சிலர் கூறும்போது, ‘தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், மறைமலை நகர் பகுதிகளில் பேருந்து நிலைய வளாகத்தில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டிலும் அமைத்தால் நன்றாக இருக்கும்’ என்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது: நகர மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுதான், குண்டூரில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. மேலும், பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்காமல் சென்றுவிட்டார். அதனால், வேறு ஒருவர் மூலம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் டாய்லெட் அமைப்பது தொடர்பாக நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார்.

நகராட்சி மண்டல இயக்குநர் பிரேமாவிடம் கேட்டபோது, ‘செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x