Published : 21 Jan 2015 03:56 PM
Last Updated : 21 Jan 2015 03:56 PM

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை, யாரையும் ஆதரிக்கவில்லை! - வைகோ திட்டவட்ட அறிவிப்பு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது. யாரையும் ஆதரிக்கவும் மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

தேனி மாவட்டம், தேவாரத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ நேற்று நேரில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மேகதாது உள்ளிட்ட இரு இடங்களில் அணைகள் கட்டவும், பின்னர் 4 தடுப்பு அணைகள் கட்டவும், 11 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்க செய்யவும் கர்நாடகம் முடிவு செய்து வேகமாக செயல்பட்டு வருகிறது. இந்த முடிவு உச்ச நீதிமன்றம் அமைத்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது.

காவிரியில் கர்நாடகம் புதிதாக அணைகள் கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, பெங்களூருவில் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் வீட்டில், இந்த இரு அணைகளையும் கட்டுவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகரும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

கர்நாடகம் சட்டவிரோதமாக அணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய அரசின் இரு அமைச்சர்கள், அணை கட்டுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதில் இருந்து மத்திய அரசிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அணை கட்டுவதற்கு எதிராக கர்நாடகத்துடன் நேரடியாக மோத முடியாது. மத்திய அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும். தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் மீத்தேன் எனும் திட்டத்தை எதிர்த்தும் பிப். 18-ல் காவிரியால் பயன்பெறும் 13 மாவட்டங்களிலும், புதுவை காரைக்கால் மாவட்டத்திலும், மார்ச் 11-ல் சென்னை மாநகரிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ல் 3-ம் கட்டமாக மத்திய அரசு அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளேன்.

நியூட்ரினோ திட்டத்தால் தேனி, இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இடுக்கி மாவட்டம் அதிகளவு பாதிப்படையும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைக்காடுகள் மிகப் பெரிய அழிவை சந்திக்கும். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவேன்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் எனக்கு கடிதம் அனுப்பவில்லை. ஸ்ரீரங்கத்தில் மதிமுக போட்டியிடாது. யாருக்கும் ஆதரவும் கொடுக்கவும் மாட்டோம்.

ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் நூறு ஆண்டுகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளது. இதனால், அந்த ஆலையை மூடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x