Last Updated : 18 Jan, 2015 12:20 PM

 

Published : 18 Jan 2015 12:20 PM
Last Updated : 18 Jan 2015 12:20 PM

காவல் துறையில் காலியாக உள்ள 1,500 அமைச்சுப் பணியாளர் இடங்கள்: பணிச்சுமையால் தாமதமாகும் பணிகள்

தமிழக காவல் துறையில் 1,500 அமைச்சுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் காவலர்களின் பணி உயர்வு உட்பட அவர்களின் அனைத்து உரிமைகளும் காலதாமதமாக கிடைக்கின்றன.

காவல் துறையில் ஒரு காவலரை தேர்வு செய்வது முதல் ஓய்வு பெறும் வரை அவரது பணியினை பாதுகாத்து பராமரிப்பது அமைச்சுப் பணியாளர்கள்தான். காவலர்களின் சம்பளம், விடுப்பு, பதவி உயர்வு, இடமாறுதல், தண்டனைகள் போன்ற பணிகளை கவனித்துக் கொள்வதுதான் அமைச்சுப் பணியாளர்களின் தலையாய பணி. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை 1.22 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ப அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த் தப்படவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளாளர் பா.முகுந்த்ராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தமுள்ள 1.22 லட்சம் காவலர்களின் பணிகளை கவனிப்பதற்கு வெறும் 2 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள்தான் உள்ளனர். அமைச்சுப் பணியாளர் பிரிவில் சுமார் 1,500 பணியிடங்கள் எப்போதும் காலியாகவே உள்ளன.

எப்போதெல்லாம் காவல் துறையில் புதிய காவலர்கள் சேர்க்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதற்கேற்ப கூடுதல் அமைச்சுப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று 3-வது காவல் ஆணைக்குழு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை இதுவரை ஏற்கப்படாமல் உள்ளது.

காவல்துறை அலுவலகங்களில் சட்டம் - ஒழுங்கு பயிற்சி பெற்ற ஆண், பெண் காவலர்கள் அமைச்சுப் பணியாளர்களோடு சேர்ந்து பணிபுரிகின்றனர். இதனால், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அவர்களது பணியும் முடக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள்கூட, கலந்தாய்வின்போது காவல் துறையை தவிர்க்கும் நிலை இருக்கிறது. ஒருவேளை அமைச்சுப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டாலும் மறுதேர்வின்போது வேறு துறைக்கு சென்று விடுகின்றனர். அதிக பணிச் சுமைதான் இதற்கு காரணம்.

கருணை அடிப்படையில் வேலை

பணியின்போது மரணமடையும் காவலர்களின் வாரிசுகள், முன்பு கருணை அடிப்படையில் அமைச்சுப் பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர். விகிதாச்சார அடிப்படையில்தான் கருணை அடிப்படையிலான பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டதால் தற்போது காவல் துறையில் கருணை அடிப்படையில் வேலை கேட்டு காத்திருப்போர் எண்ணிக்கை 2,500 ஆக உள்ளது.

10 ஆயிரம் வழக்குகள்

காவலர்கள் தங்களது உரிமைகளைப் பெற நீதிமன்றம் வரை செல்கின்றனர். இந்த வகையில் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கேட்டு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த வழக்குகளை கையாள்வது, அரசு தரப்பில் ஆவணங்களை தயாரிப்பது எல்லாம் அமைச்சுப் பணி யாளர்கள்தான்.

சலுகைகள், பயிற்சி கிடையாது

காவலர்களுக்கு வழங்குவதுபோல அமைச்சுப் பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. உதாரணமாக சனி, ஞாயிறு விடு முறை தினங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கூடுதல் நேரப்படி வழங்கப்படுகிறது. இது அமைச்சுப் பணியாளர்களுக்கு இல்லை. காவலர்கள் மரணமடைந்தால் ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. அமைச்சுப் பணியாளர்களுக்கு இந்த சலுகையும் கிடையாது.

காவலர்களுக்கு ஆண்டுக்கொரு முறை பணியிடை பயிற்சி வழங்கப் படுகிறது. ஆனால் அமைச்சுப் பணியா ளர்களுக்கு பணியில் சேர்ந்தவுடன் வழங்கப்படும் பவானி சாகர் அடிப்படை பயிற்சியை தவிர வேறெந்த பயிற்சியும் வழங்கப்படுவதில்லை.

ஆள் பற்றாக்குறையால் காவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இத னால், காவலர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, பணிக் கொடை, ஓய்வூதியும் உட்பட அனைத்து உரிமைகளும் தாமதமாக கிடைக்கின்றன.

இவ்வாறு முகுந்த்ராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x