Last Updated : 10 Jan, 2015 09:27 AM

 

Published : 10 Jan 2015 09:27 AM
Last Updated : 10 Jan 2015 09:27 AM

உச்சநீதிமன்றம் உறுதியாக உத்தரவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த இன்னுமொரு வாய்ப்பு? - நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம், வாடி போன்ற பல பெயர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதித்து கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாடுபிடி வீரர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலை இந்த ஆண்டு கொண்டாடும் நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் பினாகி சந்திரகோஸும் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் சாராம்சம் இதுதான், ‘மிருக வதை தடைச் சட்டம் 1960-ன் கீழ், மாடுகளை துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக் கட்டு போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவது உறுதியாக தெரியவந்துள்ளது. இந்த விளை யாட்டைப் பாதுகாக்க தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, கலாச்சாரம் தொடர்புடைய நிகழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் கலாச்சாரம் அல்ல

மாடுகளை துன்புறுத்துவதை பழங்கால தமிழர்கள் கலாச்சாரமாக பின்பற்றியதில்லை. எருதுகளை சிவபெருமானின் வாகனமாகவே வணங்கப்பட்டு வந்ததுதான் தமிழர்களின் கலாச்சாரம். ‘ஏறு தழுவு’ என்று சொல்லப்பட்டிருப்பது மாடுகளை அடக்குவது என்ற பொருளல்ல. மாடுகளை தழுவி வாழுதல் என்பதே அதற்கு பொருள். பழங்காலத்தில் மாடுகளின் கொம்புகளில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கட்டப்படும். அந்த நாணயங்களை எடுத்துவரும் ஆணுக்கு பெண் கொடுக்கும் வழக்கம்தான் இருந்து வந்துள்ளது.

ஒருவேளை ஜல்லிக்கட்டு இருந்ததாக கருதினாலும் மிருகவதை தடைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு இதுபோன்ற போட்டிகளுக்கு நாட்டில் இடமில்லை. உலக விலங்கின பாதுகாப்பு அமைப்பான ஓஐஇ பசி, தாகம், பயம், பதட்டம், உடல்ரீதியான துன்புறுத்தல், வலி, காயம், நோய் இல்லாத இயல்பான நிலையில் விலங்குகள் இருப்பதே சுதந்திரம் என்று பிரகடனம் செய்துள்ளது. இந்த சுதந்திரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி யில் மாடுகளுக்கு இல்லை. எனவே, தமிழக அரசின் சட்டம் ரத்து செய்யப்படுவதுடன் ஜல்லிக் கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படு கிறது’ என கறாராக கூறப்பட்டது.

இதை மறுபரிசீலனை செய்யும் படி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவசரச் சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்கின்றனர் ஒரு தரப்பினர்.

அப்படி அவசர சட்டம் கொண்டு வர முடியுமா, கொண்டு வந்தாலும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கையாக அது இருக்குமா என்பது பற்றி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவிடம் கேட்டபோது,

‘உச்சநீதிமன்றம்தான் நாட்டின் உயர்ந்த அமைப்பு. மிருக வதை தடுப்புச் சட்டப்படி இந்த விளையாட்டை அனுமதிக்க முடி யாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. கலாச் சாரம், பண்பாடு என தமிழர் களும் உறுதியாக இருக்கின்றனர். இருதரப்பும் விட்டுக் கொடுக்காத நிலைதான் உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நாம் எதுவும் பேச முடியாது. அதன் உத்தரவை எதிர்த்து அவசர சட்டம் கொண்டு வர முடியாது. ஏற்ெகனவே தமிழக அரசு இயற்றிய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில் தீர்ப்புக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார்.

ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரனிடம் பேசிய போது, ‘தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாவட்ட ஆட்சியர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோ ரிடம் மனு கொடுத்துள்ளோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும். இல்லா விட்டால் இந்த ஆண்டு சோகப் பொங்கலாகத்தான் இருக்கும்,’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x