Published : 17 Jan 2015 02:31 PM
Last Updated : 17 Jan 2015 02:31 PM

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு: தடுப்பூசி காரணமில்லை என டீன் விளக்கம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை இரண்டு பச்சிளங் குழந்தைகள் பலியாகினர்.

மருத்துவமனை அலட்சியத்தாலேயே குழந்தைகள் இருந்துவிட்டதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆவடியைச் சேர்தவர் ராசாத்தி (22), திருமழிசையைச் சேர்ந்தவர் சரண்யா (23). ராசாத்தி, சரண்யா இருவரும் கடந்த ஒரு மாத காலம் முன் ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்தனர்.

குழந்தைகள் பிறந்த முதலே உடல்நிலை குன்றியிருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இரண்டு குழந்தைகளும் உடல் நலன் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதியன்று குழந்தைகள் இருவருக்கும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பி.சி.ஜி. தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த நாளே குழந்தைகளுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகளுமே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை இரண்டு குழந்தைகளுமே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்,”பொங்கல் விடுமுறையையொட்டி மூத்த மருத்துவர்கள் பெரும்பாலோனோ வரவில்லை. மருத்துவ முதுகலை மாணவர்களே சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவர்கள் அலட்சியத்தின் காரணத்தாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது” என குற்றம்சாட்டினர்.

மருத்துவமனை மறுப்பு:

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மருத்துவமனை டீன் என்.குணசேகரன் கூறுகையில், "இரண்டு குழந்தைகளுக்குமே பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. சில தினங்களுக்கு குழந்தைகள் நலனில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால், அதன் பின்னர் குழந்தைகள் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்றார்.

இதேபோல் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணனும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பலியான குழந்தைகளுக்கு பி.சி.ஜி. தடுப்பூசி வழங்கப்பட்ட அதேநாளில் மேலும் 51 குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x