Published : 01 Jan 2015 08:47 AM
Last Updated : 01 Jan 2015 08:47 AM

பிரசவ சிகிச்சையில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 5 ஆனது: கோவை மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

உதகை மகப்பேறு அரசு மருத்துவமனையில் இருந்து பிரசவ மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்தவர் சரவணன்(31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி(28). இவர்களுக்கு பிரியதர்ஷினி(5) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், பிரசவ சிகிச்சைக்காக உதகையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ரேவதி சென்றுள்ளார்.

பிரசவத்துக்காக உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். 28-ம் தேதி காலை, அவருக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ரேவதியின் உடல்நிலை மோசமடைந்தது. தொடர் ரத்தப்போக்குக் காரணமாக சுயநினைவு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பின்னரும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு நேற்று கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட ரேவதியை, கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

‘‘சுகப் பிரசவம் மூலமாக குழந்தை பெற்றெடுத்த தங்களது பெண்ணுக்கு மோசமான சிகிச்சை அளிக்கப்பட்டதே உயிரிழப் புக்கு காரணம். எங்களது அனுமானத்தின்படி, உதகை அரசு மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்திருக்க வேண்டும். ஆனால், உயிரிழந்ததைத் தெரிவித் தால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என நினைத்து ஆம்புலன்ஸ் மூலமாக இங்கு அனுப்பிவிட்டனர்.

ஒரு வாரத்தில் எங்களது பெண்ணுடன் சேர்த்து 5 பெண்கள் இறந்துள்ளனர். 4 பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இறந்தனர். ஆனால், எங்களது பெண்ணுக்கு நடந்தது சுகப் பிரசவம். அவரும் இறந்துள்ளார் என்ற நிலையில் மருத்துவ சிகிச்சையில்தான் நூறு சதவீதம் குறைபாடு இருக்க வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின்னர் தாயின் உடல் நலத்தை சரியாக கவனித்து சிகிச்சை வழங்காததே உயிரிழப்புக்கு காரணம். பிரசவம் முடிந்தவுடன் முறையான பரா மரிப்பு வழங்கவில்லை. நான், எனது பெண்ணை இழந்து தவிக்கிறேன். இனிமேலாவது இவ்வாறு நடக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சடலத்தை நாங்கள் வாங்கப் போவது இல்லை. உயிரிழப்புக்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் ரேவதியின் தந்தை மணி.’’

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை எதிரில் மறியல் போராட்டத்துக்கு ஆயத்தம் ஆன அவர்களை போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தினர். உதகை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கப் போவது இல்லை என போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x