Last Updated : 21 Jan, 2015 09:30 AM

 

Published : 21 Jan 2015 09:30 AM
Last Updated : 21 Jan 2015 09:30 AM

மைசூர் மகாராஜாவின் நகைகள் என்று கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயற்சி: வட மாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் கைது

மைசூர் மகாராஜாவின் நகைகள் என்று ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயன்ற வட மாநில இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அடையார் லால்பகதூர் சாலை மசூதி வணிக வளாகத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் பக்ருதீன்(45). இரு தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு செல்போன் வாங்குவதற்காக வந்த 2 இளைஞர்கள், தங்களிடம் மைசூர் மகாராஜாவின் தங்க நகைகள் உள்ளன. இவை ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடையவை. நீங்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் அவற்றை கொடுத்து விடுகிறோம் என்று நம்பும்படி கூறியுள்ளனர்.

அதற்கு பக்ருதீன் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூற, அவசர தேவை இருப்பதால் ரூ.2 லட்சம் கொடுத்தால் கூட அந்த நகைகளை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

பின்னர் தங்களது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு இருவரும் சென்று விட்டனர்.

சந்தேகம் அடைந்த பக்ருதீன் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் போலீஸாரின் ஆலோசனைப்படி, ரூ.2 லட்சம் கொடுத்து நகைகளை வாங்கிக் கொள்வதாக செல்போனில் கூறியிருக்கிறார் பக்ருதீன். உடனே பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து பணத்தை கொடுத்து நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர்கள் கூற, அங்கே பக்ருதீன் செல்ல, அவர் அருகே இருவரும் வந்ததும் மறைந்திருந்த சாஸ்திரி நகர் போலீஸார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீஸார் கூறும்போது, "கைதானவர் களிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட அரை கிலோ எடை கொண்ட நகைகளை கைப்பற்றி இருக்கிறோம். இவை அனைத்தும் சாதாரண பித்தளை நகைகள். கைதானவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நாராயணன் என்கிற ராகுல்(25), மத்தியப்பிரதேசம் போபாலை சேர்ந்த தீபக்(23) என்பது விசாரணையில் தெரிந்தது.

'எனது தந்தை மைசூர் மகாராஜா வீட்டில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டபோது 2 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் கிடைத்தன. அவற்றை எனது தந்தை, மகாராஜாவின் காவலாளிகளுக்கு தெரியாமல் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். அந்த நகைகளைத்தான் உங்களிடம் விற்பனை செய்கிறோம்' என்று பலரிடம் கூறி ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார் ராகுல். இதற்கு நண்பர் தீபக்கையும் கூட்டணி சேர்த் துள்ளார். இதேபோல சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மற்றும் சில இடங்களில் ஏமாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இவர்கள் வேறு யாரிடமும் இதேபோல ஏமாற்றியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x