Last Updated : 13 Jan, 2015 08:59 AM

 

Published : 13 Jan 2015 08:59 AM
Last Updated : 13 Jan 2015 08:59 AM

ஆளில்லா விமானங்களை பறக்க விட முறையான விதிகள் இல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியர் தகவல்

ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு உலக அளவில் முறையான விதிகள் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 8-ம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரை அருகிலும், கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி அண்ணா சாலையிலும் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் கீழே விழுந்தன. இந்த இரு விபத்துகளிலும் யாருக்கும் காயம் ஏற்படாதது மகிழ்ச்சியான விஷயம். முறையான அனுமதியில்லாமல் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இரு சம்பவத்திலும் சேர்த்து இருவர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதற்கு போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விஷயமே இந்த சம்பவங்களுக்கு பின்னர்தான் பலருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விளையாட்டுக்காக ஆளில்லா விமானம் வைத்திருக்கும் நபர்கள் பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து விவரம் கேட்டுச் செல்கின்றனர்.

'விளையாட்டிற்காக பறக்க விடும் விமானங்களுக்கு அனுமதி பெற தேவையில்லை. ஆனால் 10 மீட்டர் உயரத்துக்கும் அதிக மாகவோ, பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகை யிலோ அவற்றை பறக்கவிடக் கூடாது' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் தொழில் ரீதியாக வீடியோ எடுக்க ஆளில்லா விமானங்களை பயன் படுத்தும்போது காவல் துறை யினரிடமும், விமான போக்குவரத்து துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பிய பலூன்களை பறக்க விடுவதற்கும் போலீஸ் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும்.

ஆளில்லா விமானங்களால் பயணிகள் விமானத்துக்கு பல பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ளது. பயணிகள் விமானம் குறைந்தது 2000 ஆயிரம் அடிகளுக்கும் மேலேதான் பறக்கும். ஆனால் ஏறும்போதும், இறங்கும்போதும் மிகவும் கீழே வரும். இதனால் விமான நிலையங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் இருப்பவர்கள் மிக கவனமாக ஆளில்லா விமானங்களை பறக்கவிட வேண்டும். இங்கிலாந்தில் விமான நிலையத்துக்கு 25 கி.மீ. சுற்றளவில் எந்த பொருளும் வானில் பறக்கக் கூடாது என்ற விதி உள்ளது.

400 மீ. உயரம் வரை பறக்கலாம்

ஆளில்லா விமானங்கள் தயாரித்து மாணவர்களுக்கு அதன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்தில்குமார் கூறும்போது, "ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதற்கு உலக அளவில் முறையான விதிமுறைகள் இல்லை. இந்தியாவில் 400 மீட்டர்களுக்கு கூடுதலான உயரத்தில் ஆளில்லா விமானம் உட்பட எதையும் பறக்கவிடக்கூடாது. ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன. ஏரோ மாடலிங் என்ற வகையை சேர்ந்த விளையாட்டு விமானங்கள்தான் சந்தைகளில் இப்போது அதிகமாக விற்கப்படுகின்றன. இதைத்தான் பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

வரும் ஆண்டுகளில் எந்த துறையில் அதிகமான வேலைவாய்ப்பு இருக்கும் என்று உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஆளில்லா விமான துறையில்தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. நம் மாணவர்கள் இப்போதுதான் இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் விளையாட்டுக்காக விமானத்தை இயக்குபவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஆளில்லா விமான ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு தொல்லை ஏற்படுத்திவிடக்கூடாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x