Published : 12 Jan 2015 09:29 AM
Last Updated : 12 Jan 2015 09:29 AM

வருவாய்த்துறை அலுவலகங்களில் லஞ்சம் வாங்க நிர்பந்திப்பதாக அதிகாரிகள் மீது ஊழியர்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கித்தரச்சொல்லி இடைநிலை ஊழியர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம் பள்ளி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை உள்ளிட்ட 5 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின்பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் மற்றும் நில உடமைச் சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு சான்றிதழ் பெற வரும் மக்களிடம் லஞ்சம் வாங்கித்தர வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக இடைநிலை ஊழியர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து புதிதாக வருவாய்துறையில் பணியில் சேர்ந்த ஊழியர் ஒருவர் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ பகுதியில் தனது புகாரை பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து தனது பெயரை வெளியிட விரும்பாத அவரிடம் விசாரித்தபோது கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பலர் பணிக்கு சேர்ந்துள்ளனர். அவர்களை ஒவ்வொரு சான்றிதழ் வழங்கவும் குறிப்பிட்ட தொகை லஞ்சமாக பெற வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்திக் கின்றனர்.

இதற்கு, ‘நாங்கள் எங்களது உயர் அதிகாரிகளை மாதந்தோறும் கவனிக்க வேண்டி உள்ளது’எனக் கூறுகின்றனர். மேலும் சான்றிதழுக்கு ஏற்றபடி தொகையை நிர்ணயித்துள்ளனர். குறிப்பாக வாரிசுச் சான்றிதழ் பெற உயர் அதிகாரிகளை அணுகினால் பணம் இல்லாமல் கொடுப்பதில்லை.

இது ஒரு புறம் இருக்க அலுவலகத்துக்கு தேவையான அட்டை, பேனா, பின், நூல் உள்ளிட்ட எழுது பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டாலும் அதனை வாங்கித் தருவதில்லை. இவற்றை சான்றிதழ் வாங்க வருபவர்களிடமே வாங்கித்தர வற்புறுத்துகின்றனர். மேலும், கோப்புகளை இருப்பு அறையில் வைக்கவும், அதனை மீண்டும் எடுக்கவும் அங்கு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்கின்றனர்.

மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் புதிதாக பணிக்கு வந்த எங்களுக்கு அதிகாரிகள் நல்வழியை காட்டாமல், லஞ்சம் வாங்க பழக்கப்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும். இந்த நிர்பந்தத்தால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறோம். அச்சத்துடனே பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x