Last Updated : 24 Jan, 2015 05:32 PM

 

Published : 24 Jan 2015 05:32 PM
Last Updated : 24 Jan 2015 05:32 PM

பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை: கோவைக்கு மேலும் ஓர் ஆம்புலன்ஸ் ஒதுக்க அரசு முன்வருமா?

பச்சிளம் குழந்தைகளை விரைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸுகளுக்கு கூடுதல் தேவை உள்ளது. கோவை போன்ற பெரிய மாவட்டங்களுக்கு கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற 2008-ம் ஆண்டு ஜி.வி.கே. அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து தமிழக அரசால் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பலனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளுக்கான (நியோநேடல்) இலவச அவசர சிகிச்சைக்கான பிரத்தியேக ஆம்புலன்ஸ் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்தது.

சென்னையின் தேவை கருதி 3 ஆம்புலன்ஸும், ஏனைய மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 35 நியோநேடல் ஆம்புலன்ஸுகளுடன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பிறந்த சில மணி நேரமான குழந்தைகளுக்கு, மேல் சிகிச்சை தேவைப்படும்போது விரைந்து அந்தக் குழந்தையை உரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்காக நியோநேடல் ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

பிரத்தியேகமாக பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்காகவே வெண்டிலேட்டர், இன்குபேட்டர் வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, உயிருக்குப் போராடும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதோடு, நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் சேவையை கட்டணமில்லாமல் சாதாரண மக்களும் பெற முடிகிறது.

ஆரம்ப சுகாதார மையம், தாலுகா அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பிறந்த குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக உடனடியாக மேல் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு இந்த ஆம்புலன்ஸ்கள் பெரிதும் துணை புரிகின்றன.

இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்தந்த மாவட்டத் தலை நகரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படும்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் 108 தொலைத்தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால், கோவை போன்ற பெரிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே ஒரு நியோநேடல் ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 அழைப்புகள் வருகின்றன. பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் வரை சென்று குழந்தைகளை எடுத்து வர வேண்டி இருப்பதால் ஒரு ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லை; கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஊழியர்கள்.

கோவை மாவட்டத்துக்கு என வழங்கப்பட்ட நியோநேடல் ஆம்புலன்ஸ் பொள்ளாச்சியில் இருந்து குழந்தையை எடுத்து வருவதற்குச் சென்றுவிட்டால், மேட்டுப்பாளையத்தில் அவசரத் தேவைக்காக அழைப்பு வரும்போது உடனடியாகச் செல்ல முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழலில், திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட நியோநேடல் ஆம்புலன்ஸை மேட்டுப்பாளையத்துக்கு வரவழைத்துக் கொள்கிறோம்.

இதேபோல, திருப்பூர் ஆம்புலன்ஸ் இயக்கத்தில் இருக்கும்போது தாராபுரம் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தால், கோவையில் உள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அது போன்ற நேரங்களில் கோவையில் நியோநேடல் அழைப்புகள் பதிவாகும்போது அவர்களுக்கு சேவை கிடைப்பதில்லை. தனியார் வாகனங்களை நாட வேண்டியதைத் தவிர வேறு வழி கிடையாது. கோவை உள்ளிட்ட ஏனைய பெரிய மாவட்டங்களுக்கு கூடுதலாக ஒரு நியோநேடல் ஆம்புலன்ஸ் கட்டாயம் தேவை என்கின்றனர் ஊழியர்கள்.

இது குறித்து கோவை மாவட்ட 108 சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டபோது, தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு ஆம்புலன்ஸை கொண்டு கேஸ்களை எதிர்கொண்டு வருகிறோம். கூடுதலாக ஆம்புலன்ஸ் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x