Published : 27 Jan 2015 09:54 AM
Last Updated : 27 Jan 2015 09:54 AM

தமிழகத்தில் 232 தாலுகாக்களில் பிப். 28-க்குள் பொது சேவை மையங்கள்: சான்றிதழ், சமூகப் பாதுகாப்புத் திட்டப்பணிகள் எளிதாகின்றன

அடுத்த மாத இறுதிக்குள் தமிழகத் தில் 232 வட்டங்களில் பொது சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றின் மூலம் சமூக பாது காப்பு திட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பணி எளிமையாக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சீரமைக்கப்பட்டு, சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி முதல் கேபிள் டிவி சேவை தொடங்கப்பட்டது. சென்னைக்கான ஒளிபரப்பு சேவை 2012-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் பொது சேவை மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கேபிள் டிவி அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், தற்போது 75 கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து 26,910 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், 70.52 லட்சம் சந்தாதாரர்களுக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகிறது.

தமிழகத்திலுள்ள 254 தாலு காக்களிலும் பொது சேவை மையங் களை அமைக்க கேபிள் டிவி நிறுவனம் முடிவு செய்தது. இதில் சென்னையில் 10 வட்டங்களில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 12 வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது சேவை மையங்கள் நிறுவப்பட்டு, டிசம்பர் 20 முதல் பொது மக்களுக்கு மின் ஆளுமை சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம், சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 776 பேர் பயனடைந்துள்ளனர்.

குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக் கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான பதிவுகள் ஆகியவை பொது சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், நடைமுறையிலுள்ள 22 பொது சேவை மையங்கள் நீங்கலாக, தமிழகத்தில் மீதமுள்ள 232 வட்டங்களிலும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பொது சேவை மையங்கள் நிறுவப்பட்டு சேவை கள் தொடங்கப்படும். இந்த மையங்கள் மூலம், தமிழக மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x