Published : 11 Dec 2014 10:38 AM
Last Updated : 11 Dec 2014 10:38 AM

90 சதவீத மனித உரிமை மீறல் புகார்கள் காவல்துறைக்கு எதிராகவே வருகின்றன: தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவர் தகவல்

மனித உரிமை மீறல் தொடர்பாக வரும் புகார்களில் 90 சதவீதம் காவல்துறையினருக்கு எதிரான புகார்களாகவே உள்ளன என்று தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் டி.மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மனித உரிமை ஆணைய அலுவலகத்தில், சர்வதேச மனித உரிமை தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கொத்தடிமைகள் மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அபிராமிக்கு ஆணையத்தின் தலைவி டி.மீனாகுமாரி பரிசு வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் மீனாகுமாரி பேசியதாவது:

தமிழகத்தில் மனித உரிமை குறித்து விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிக அளவு மனித உரிமை மீறல் குறித்து புகார்கள் வருகின்றன. ஆணையத்தில் பெறப்படும் புகார்களில் 90 சதவீதம் காவல்துறையினருக்கு எதிரானதாகவே உள்ளன. காவல்துறையினருக்கு எதிராக வரும் அனைத்து புகார்களையும் பரிசீலித்து, உண்மை தன்மையை உறுதி செய்த பிறகே அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பிஹார் போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகள் குறைந்து வருவதாக கூறுகின்றனர். இதில் உண்மை இல்லை. அங்கிருக்கும் ஏழை, எளியோர் ஏஜென்சிகள் மூலமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு தங்குமிடம், சுகாதாரம், கல்வி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன. ஏஜென்சிகள் மூலமாக வந்தாலும் அவர்கள் கொத்தடிமைகள்தான்.

இவ்வாறு மீனாகுமாரி பேசினார்.

ஏடிஜிபி விளக்கம்

விழாவில் பேசிய ஏடிஜிபி கே.ராதாகிருஷ்ணன், காவல்துறை மீது அதிக மனித உரிமை மீறல் புகார்கள் வருவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

வன்முறை எண்ணம் கொண்ட சமூகத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போலீஸார் லத்தியை எடுத்தால், பொதுமக்கள் பயங்கர ஆயுதங்களை கையில் எடுக்கின்றனர். மற்ற துறைகளுக்கு பொதுமக்கள் பயனாளிகளாக செல்கின்றனர். காவல் துறையிடம் அப்படி வருவதில்லை. பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் தந்தால், மற்றொருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

நகை திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்தால், அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்ய 24 மணி நேரம் போதாது. இருப்பினும் சட்டப்படியே விசாரிக்கிறோம். தவறு செய்து தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோர், மனித உரிமை மீறப்பட்டதாக புகார் தருகின்றனர். மனித உரிமை ஆணையத்துக்கு வரும் புகார்களை குறைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x