Last Updated : 20 Dec, 2014 02:30 PM

 

Published : 20 Dec 2014 02:30 PM
Last Updated : 20 Dec 2014 02:30 PM

புதுச்சேரி பந்த்: கடைகள் மூடல், தேர்வு ஒத்தி வைப்பு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளில் மூவர் தற்கொலை செய்ததற்கு ஆசிரம நிர்வாக குறைபாடே காரணம் எனக் கூறி இன்று புதுவையில் பந்த் நடைபெற்றது.

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பீகாரை சேர்ந்த 5 சகோதரிகள் உறுப்பினர்களாக சேர்ந்து அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்கள் ஆசிரம விதிகளை மீறியதாக கூறி குடியிருப்பில் இருந்து வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுத்தது. இதனால் விரக்தியடைந்த அவர்கள் 5 பேரும் தாய், தந்தை ஆகியோரும் தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. ஆசிரமம் மற்றும் ஆசிரமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தது.

மேலும் ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரமத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக சமூக அமைப்புகள் அறிவித்தன. இதற்கு காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய நீதிகட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

இன்று காலை முழுஅடைப்பு தொடங்கியது. புதுவையில் உள்ள பெரிய மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் ஆகியவை இயங்கவில்லை. கடைகள் அமைந்துள்ள முக்கிய வீதிகளான நேருவீதி, காந்திவீதி, அண்ணாசாலை, காமராஜர்சாலை, மறைமலை அடிகள் சாலை ஆகியவற்றில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. புதுவை அரசு பஸ்களும், தமிழக அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவை சென்றன. புதுவையில் தனியார் பஸ்களே அதிகம் இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். ஆட்டோ, டெம்போ ஓடவில்லை.

100 அடி சாலையில் காரைக்காலில் இருந்து வந்துகொண்டிருந்த புதுவை அரசுக்கு சொந்தமான பஸ் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதைபோல உப்பளத்தில் தனியார் கல்லூரி பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் தனியார் பஸ் மீதும் கல்வீசப்பட்டது. இதில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

தனியார், அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று அரையாண்டு தேர்வு நடப்பதாக இருந்தது. அது ஜனவரி 2–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதியம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

முழுஅடைப்பையொட்டி புதுவை நகரம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். ரோந்து வாகனங்கள் சுற்றி வந்தன.

கடந்த 2 நாட்களாக ஆசிரம கட்டிடங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. முழுஅடைப்பு நடப்பதால் இன்றும் தாக்குதல் நடக்கலாம் என கருதி ஆசிரம கட்டிடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரமம் நடத்தும் வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள் அனைத்துக்கும் 3–வது நாளாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x