Last Updated : 29 Dec, 2014 08:48 AM

 

Published : 29 Dec 2014 08:48 AM
Last Updated : 29 Dec 2014 08:48 AM

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு: கல்லூரி மாணவர்களை கவர ‘மோடியின் தூதுவர்’ திட்டம் - பாஜக தீவிர முயற்சி

தமிழகத்தில் பாஜகவுக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க அக்கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களைக் கவர ‘மோடியின் தூதுவர் ’ என்னும் திட்டத்தையும், பொதுமக் களைக் கவர பொது இடங்களில் ஸ்டால்களையும் அவர்கள் அமைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜகவை பலமான கட்சியாக மாற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், பொது மக்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிறுத்தங்கள், மால்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கைக்கான ஸ்டால்களை அமைத்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களை குறிவைத்து, ‘மோடியின் தூதுவர்’ என்ற திட்டத்தை பாஜக இளைஞரணி செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய இளைஞரணிச் செயலாளர் முருகானந்தம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித் ஷா, ‘மிஷன் தமிழ்நாடு’ என்னும் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகளுக்கு வெவ்வேறு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இளைஞரணிக்கு கேம்பஸ் மோடி அம்பாசடர் (மோடியின் தூதுவர்) என்னும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கல்லூரி மாணவர் களைத் தொடர்புகொண்டு அரசிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் கேட்டு வருகிறோம். இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் ஒருவர் மோடியின் தூதுவராக நியமிக்கப்படுவார். அவருக்கு பிரதமரின் நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவை உடனுக்குடன் தெரியப்படுத் தப்படும். இந்த திட்டம் தமிழகத் தில்தான் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர் அணியிலும் இதே போன்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக வழக்கறிஞரும், பாஜக மாநில துணைத் தலைவருமான வானதி னிவாசன் கூறும்போது, “நீதிமன்றங்களில் உள்ள எங்கள் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சிகளின் வழக்கறிஞர்களையும் அணுகி வருகிறோம்” என்றார். இதுதவிர மீனவரணி, மகளிரணி போன்ற பிரிவுகளுக்கும் பல்வேறு வகையான பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x