Published : 11 Dec 2014 11:11 AM
Last Updated : 11 Dec 2014 11:11 AM

மூளை ரத்தக்குழாய் வீக்க நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை: அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக செய்து சாதனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளை ரத்தக்குழாய் வீக்க நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத் தூர் அருகே உள்ள மட்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றி வேல், கிளியம்மாள் தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன் (8). இவர் கடுமையான தலைவலி ஏற்பட்டு சுயநினைவு பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மூளை நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவனின் மூளை ரத்தக்குழாய் விரிவடைந்து வீங்கி வெடித்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ரங்கநாதன் ஜோதி தலைமை யிலான டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சை மூலமாக ஒரு செ.மீ. அளவிலான 3 சிறிய கருவிகளை (கிளிப்கள்) பொருத்தி மூளை ரத்தக்குழாய் வீக்க பிரச்சினையை சரிசெய்தனர்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரங்கநாதன் ஜோதி கூறியதாவது:

மூளை ரத்தக்குழாய் விரிவடைந்து வீங்கும் நோய் (அனீரிஸம்), ஒரு லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படும். சிறுவனுக்கு நுண்ணோக்கி மூலமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த மருத்துவமனையில் முதல் முறையாக 8 வயது சிறுவனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் அரிய அறுவை சிகிச்சையாகும்.

15 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

இதே போல மைக்கேல் ராஜ் (60) என்பவருடைய இடது பக்க முகம் தொடர்ந்து இடைவிடாமல் துடித்துக்கொண்டே இருந்தது. பரிசோதனை செய்து பார்த் தபோது, மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பியல் ரத்தக்குழாய், மூளையின் தண்டு பகுதி அருகே உராய்ந்து கொண்டி ருந்தது. இந்த பிரச்சினையை நுண்ணோக்கி மூலமாக அறுவை சிகிச்சை செய்து சரி செய்தோம்.

பிரியதர்ஷினி (15) என்ற பெண்ணுக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. இதனால் தலை, கழுத்து எலும்பு பகுதியில் அரிப்பு காரணமாக, தலை பலவீனம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திருகுகள், தகடு மற்றும் கம்பி பொருத்தி சரிசெய்தோம். மேலும் 40 வயது நோயாளிக்கு ஊடுகதிர் மூலம் உடைந்த எலும்பில் திருகுகள் பொருத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x