Published : 05 Dec 2014 09:04 AM
Last Updated : 05 Dec 2014 09:04 AM

காவிரியில் அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் பஸ், ரயில் மறியல்: விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரண்ட அனைத்துக் கட்சியினர்; ஆயிரக்கணக்கானோர் கைது

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதைக் கண்டித்தும் அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் காவிரிப் படுகை மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ரயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 18 ஆயிரத்து 834 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்த இந்த போராட்டத்துக்கு திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், தமாக(மூ), பாமக, மகஇக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சை ரயில் நிலையத்தில் திமுக தேர்தல் பணிக்குழு செயலர் எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக் கம், முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க நிர்வாகி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பெ.சண்முகம், மதிமுக மாவட்டச் செயலர் கோ.உதயகுமார், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சுவாமிமலை விமலநாதன் மற்றும் மகஇகவினர், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் ரயில் மறியல் நடைப்பெற்றது.

மாவட்டம் முழுதும் 72 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,879 பேரும், 6 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1,024 பேரும் என மொத்தம் 3,903 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்…

திருவாரூர் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர் கோ.பழனிச்சாமி தலைமையில் எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரல் ரயிலை மறித்த திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 5 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1,204 பேரும், 60 இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 4,041 பேரும் என மொத்தம் 5,245 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில்…

நாகப்பட்டினத்தில் திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில் 500-க்கும் மேற் பட்டோர் தோணித்துறை கேட்டில் காரைக்கால்-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட் டத்தில் 29 இடங்களில் சாலை மறியல், 2 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட 6,847 பேர் கைது செய்யப்பட்டனர் நாகை மாவட்டத்தில் நேற்று வணிகர்கள் ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திருச்சியில்...

திருச்சி ரயில் நிலையம் முன்பு திமுக மாவட்டச் செயலர் நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இந்திரஜித் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், காங் கிரஸ், தமாகா(மூ), மதிமுக, சோஷி யல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சிகளைச் சேர்ந்த 1,839 பேர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்…

இம்மாவட்டம் புளிச்சங்காடு - கைகாட்டி பகுதியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மு.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் செங்கோடன், ஒன்றியச் செயலர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x