Published : 28 Dec 2014 11:49 AM
Last Updated : 28 Dec 2014 11:49 AM

அடையாளமில்லாமல் காணாமல் போகும் காலோடிகள்: குடியுரிமையில்லாமல் சொந்த நாட்டிலேயே புறக்கணிப்பு

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் சொந்த மண்ணிலேயே உரிமைகளையும், அரசு உதவியும் கிடைக்காமல் காடு, மேடு, பனி, வெயில், மழையில் ஒருவேளை உணவுக்காக நிரந்தர வருமானமின்றி அலையும் சாட்டையடிக்காரர்கள், குறவர்கள், கலைக் கூத்தாடிகள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், ஈயம் பூசுகிறவர்கள், பகல் வேடக்காரர்கள் உட்பட 20 விதமான நாடோடிகள் தமிழகத்தில் உள்ளனர். நிரந்தர வாழ்விடம், வருமானம் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதால் இவர்கள் ‘அலைகுடிகள்’, ‘மிதவைக் குடிகள்’, காலோடிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் இவர்கள், மூட்டை, மூடிச்சுகளுடன் பஸ்களில் ஏறிச் செல்ல முடியாது என்பதால், எங்கு சென்றாலும் நடந்தே இடம் பெயர்கின்றனர்.

இவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது ஆதார், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் உள்ளிட்ட எந்த வரையரையிலும் இல்லாததால் அரசின் திட்டங்கள், உதவிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியுரிமைச் சான்றுகள் இல்லை

இதுகுறித்து நாடோடிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒ.முத்தையா ‘தி இந்து’விடம் கூறும்போது, நாடோடிகள் நிலையில்லாமல் இருப்பதால் இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, ஜாதிச் சான்று உள்ளிட்ட எந்த குடியுரிமைச் சான்றும் இல்லை. நிரந்தர வருவாய் இல்லாவிட்டாலும், இவர்களில் பெரும்பாலானோர் பிச்சை எடுப்பது கிடையாது. தங்கள் கலைத்திறமைகளை வெளிக்காட்டி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் தங்களது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்களுக்கு அடையாளம் இல்லை.

கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்

சில நாடோடிகளுடைய குழந்தைகள், வயிற்றுக்கு உணவில்லாமல் பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில்களில் பிச்சை எடுக்கின்றனர். அனைவருக்கும் கல்வித்திட்டத்தில், உணவு விடுதிகளில் வேலைபார்க்கும் சிறார்களை மீட்டு, பள்ளிகளில் சேர்க்கும் கல்வி அதிகாரிகள், இந்த நாடோடிக் குழந்தைகளை மட்டும் ஏனோ கண்டுகொள்வதில்லை. அதனால், நாடோடிகளுடைய குழந்தைகள் கடைசி வரை தங்கள் மூதாதையர்களைபோல நகர்ந்துகொண்டே தங்கள் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். இவர்களை, இந்த சமூகமும், அரசும் புறக்கணிப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே உள்ளனர்.

தனி நலத்துறை உருவாக்க வேண்டும்

அடையாளம் இல்லாமல் நாடோடிகளாக சுற்றித் திரியும் இவர்களை மீட்டெடுக்க தற்போது ‘டெண்ட் சொசைட்டி’ உள்ளிட்ட சில தன்னார்வ அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடோடிகளாக சுற்றித்திரியும் இவர்கள் வாழ்க்கையில் கல்வி மூலமே மாற்றம் கொண்டு வர முடியும். அதற்கு நாடோடிகள் மேம்பாட்டுக்காக, தனி நலத்துறையை உருவாக்க வேண்டும்.

நாடோடி இன மக்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடோடி இன மக்களை துல்லியமாகக் கணக்கெடுப்பு நடத்தி, இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அரசின் திட்ட விளம்பரங்களை இவர்களுடைய கலைநிகழ்ச்சிகள் மூலம் செய்தால், அவர்களுக்கு நிரந்தர வருவாய் வாய்ப்பு கிடைக்கும்'' என்றார்.

காணாமல்போகும் நாடோடி பெண்கள்

தமிழக நாடோடிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மகேஸ்வரி கூறும்போது, ‘நாடோடிகள் பொது இடத்தில் டெண்ட் அமைத்து பாதுகாப்பில்லாமல் தங்குவதால் சிறுமிகள், பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் சமீபத்தில் ஹரிகரன் என்ற நாடோடியை ஒரு கும்பல் படுகொலை செய்தது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தூங்கிய நாடோடிச் சிறுமியை லாரி ஓட்டுநர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது. மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சாமி வேடம் போடும் கூத்தாடியான 19 வயது இளைஞர் துர்கேஷை, சிலர் கடத்திச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி கொலை செய்தனர். பல நாடோடி பெண்கள் காணாமல் போய் உள்ளனர். சத்தமில்லாமல் நடக்கும் இந்த குற்றச்சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை என வேதனை தெரிவித்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x