Published : 16 Dec 2014 08:45 AM
Last Updated : 16 Dec 2014 08:45 AM

நேதாஜி உயிருடன் உள்ளார்; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயார்: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு தாக்கல்- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளார். அவரைப் போர்க் குற்றவாளியாக நடத்த மாட்டோம், இங்கிலாந்திடம் ஒப்படைக்க மாட்டோம்’ என்று உறுதியளித்தால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசின் வசமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி. ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘நேதாஜி சுபாஷ் சுந்திர போஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. அவர், விமான விபத்தில் இறந்தது உறுதிப்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் வசமுள்ள அவர் தொடர்பான ஆவணங்களின் விவரங்கள் வெளியாகாத வரை மர்மங்களும் நீடிக்கும். எனவே, அந்தக் கோப்புகளில் உள்ள விவரங்களை வெளியிட்டு, நேதாஜி மரணம் குறித்து மக்கள் மத்தியில் நீடிக்கும் மர்மங்களை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது.

நேற்று மீண்டும் விசாரணை

இந்த மனு நீதிபதி எம். வேணு கோபால் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிருடன் உள்ளார். எங்கள் அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸை இந்த நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த தயாராக உள்ளார். நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரைப் போர் குற்ற வாளியாக நடத்தமாட்டோம் என்றும், இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்படி உத்தரவாதம் அளித்தால் நேதாஜியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த தயாராக உள்ளோம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, ‘நேதாஜி 1945-ல் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், 1948, 1949, 1962, 1964 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளில் நேதாஜி பங்கேற்றுள்ளார். சீன அதிபர், மாசேதுங் ஆகியோருடன் நேதாஜி இருப்பது போன்ற படங்கள், நேதாஜி உயிருடன் இருப்பது தொடர்பான பல்வேறு கடிதங்கள் மற்றும் விடியோ காட்சிகள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்வதற்குத் தயாராக உள்ளோம்’ என்றார்.

பின்னர், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x