Last Updated : 11 Dec, 2014 11:33 AM

 

Published : 11 Dec 2014 11:33 AM
Last Updated : 11 Dec 2014 11:33 AM

80,000 வெளிநாட்டு பறவைகள் இமாச்சல் அணைக்கு வருகை

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது பாங் அணை. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஈரநிலம் உள்ளது. இந்த அணைக்குத் தற்போது சுமார் 80,000க்கும் அதிகமான பறவைகள் வலசை வந்துள்ளன. இவை மத்திய ஆசியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுமார் 307 சதுர கிமீ பரப்பளவுள்ள பாங் அணை இந்தியாவின் முக்கியமான ஈரநிலமாகக் கருதப்படுகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும்.

இந்த அணையில் தற்போது 421 வகையான பறவைகள் வலசை வந்துள்ளன. அதில் முக்கியமாக குருகுகள் இன பறவைகள் முதன் முறையாக இந்த அணைக்கு வலசை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பறவை இந்தியாவில் அரிதாகக் காணப்படும் பறவையாகும்.

குருகுகள் தவிர, நீர்க்காகங்கள், முக்குளிப்பான்கள், ஆற்று ஆலா, விரால் அடிப்பான், ஊசிவால் வாத்து, பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட பறவை இனங்களும் இங்கு வலசை வந்துள்ளன. இவற்றில் பட்டைத்தலை வாத்துகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 43,000 ஆகும்.

திபெத், ரஷ்யா, சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் தற்போது பனிக்காலம் தொடங்கியிருக்கிறது. அங்கு அதிகளவு குளிர் ஏற்படும். அவற்றில் இருந்து விடுபடவே பல்வேறு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இந்தப் பறவை வரும் ஜனவரி மாதம் வரை இந்த அணைப் பகுதியில் தங்கியிருக்கும் என்று பறவையியலாளர்கள் தெரிவித் துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், பாங் அணையில் 119 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த 1,28,000 பறவைகள் அடையாளம் காணப்பட்டதாகத் தகவல் உள்ளது.

நாட்டில் மிக வளமான உயிரிப் பன்மையம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று இமாச்சலப் பிரதேசமாகும். இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் சுமார் 36 சதவீதம் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. நாட்டில் உள்ள 1,228 பறவை இனங்களில் சுமார் 447 இனங்கள் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x