Published : 04 Dec 2014 05:51 PM
Last Updated : 04 Dec 2014 05:51 PM

தலைமுறைக்கு வழிகாட்டும் நீதிபதி கிருஷ்ணய்யர் தீர்ப்புகள்: வைகோ புகழஞ்சலி

நீதிபதி கிருஷ்ணய்யர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, அவர் தந்த தீர்ப்புகள் வரப்போகின்ற தலைமுறைக்கு வழிகாட்டும் என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உலக நாடுகள் போற்றுகின்ற நீதித்துறை நாயகனாகத் திகழ்ந்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மனித உரிமைகளின் காவலர் நீதி அரசர் கிருஷ்ணய்யர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

பொது உடைமைக் கொள்கைகளின் பால் ஈர்ப்பும், சமதர்ம நோக்கும், சமூக நீதி உணர்வும் கொண்ட கிருஷ்ணய்யர், மனித உரிமைகளைக் காக்கும் விதத்தில் எண்ணற்றவர்களுக்கு, குறிப்பாக நாதி அற்றுப் போகின்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கின்ற, நீதித்துறைக்கு வழி காட்டுகின்ற உன்னதமான தீர்ப்புகளை, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழங்கிய பெருமகன் ஆவார்.

கேரளத்தில் முதலாவதாக அமைந்த, காங்கிரஸ் அல்லாத நம்பூதிரிபாட் அமைச்சரவையில் அமைச்சராகப் பேரும் புகழும் பெற்றார். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று அவர் காலமெல்லாம் போராடி வந்தார். அதுகுறித்து அவர் சொன்ன கருத்துகள் வெள்ளித் தாம்பாளத்தில் வைத்த பொற்பழங்களுக்குச் சமம் ஆகும்.

1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள், லண்டன் மாநகரில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் அவரும் நானும் பங்கு பெற்றோம். ஈழத்தமிழர்களை ஆதரித்தும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும், இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்தும், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசைக் கடுமையாக விமர்சித்தும் அவர் ஆற்றிய உரை, நடுநிலையாளர்களின் கவனத்தை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திருப்பியது.

1996 செப்டம்பர் 15 இல் அண்ணா பிறந்த நாள் விழாவின்போது, எனது தலைமையில் நடைபெற்ற மாநில சுயாட்சிக் கருத்தரங்கத்தில் நீதிபதி கிருஷ்ணய்யர் உரை ஆற்றினார். மறுநாள் காலையில் என் இல்லத்திற்கு வந்து சிற்றுண்டி அருந்தினார். அப்பொழுது அவர் கூறியது மிக முக்கியமானதாகும். கேரளத்தில் அரபிக் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று தாம் அமைச்சரவையில் இருந்தபோது முடிவு எடுத்ததாகவும், ஆனால் அதைச் செயல்படுத்த முடியாமற் போயிற்று என்றும் என்னிடம் கூறினார்.

100 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து, இன்று இயற்கையோடு கலந்து விட்ட நீதி அரசர் கிருஷ்ணய்யர் புகழ் நீலவானத்தைப் போல் நிரந்தரமாக இருக்கும். அவர் தந்த தீர்ப்புகள், வரப் போகின்ற தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.

அப்பெருமகனாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x