Last Updated : 26 Dec, 2014 09:49 AM

 

Published : 26 Dec 2014 09:49 AM
Last Updated : 26 Dec 2014 09:49 AM

ரயில் சேவையில்லாத தேனி மாவட்டம்: முடங்கி கிடக்கும் போடி - மதுரை அகல ரயில் பாதை திட்டம்

ரயில் சேவை இல்லாத தேனி மாவட்டத்தில் முடங்கி கிடக்கும் போடி - மதுரை அகல ரயில்பாதை திட்டம் செயல்படுத்துவது எப்போது? என பல ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தேனி மாவட்ட மக்களின் தேவைக்காக கடந்த 1928-ம் ஆண்டு மதுரையில் இருந்து போடி வரை மீட்டர்கேஜ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த சேவை நிறுத்தப்பட்டு, புதிதாக அகல ரயில்பாதை திட்டம் தொடங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது. இதற்காக ரூ. 280 கோடியில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசால் இத்திட்டத்துக்கு இதுவரை ரூ. 17 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பெரியகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ லாசர் தலைமையில், போடி - மதுரை அகல ரயில்பாதை திட்ட அமலாக்கக் குழு என்ற பெயரில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்திட கடந்த மூன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

'இதனையடுத்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ரயில்வே உயர் அதிகாரிகள் தேனி மாவட்டத்துக்கு வந்து இத்திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதற்கிடையில், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால், போடி மதுரை ரயில் சேவைக்கு மத்திய அரசிடம் போராடி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துச் சென்றார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு, சிறு சிறு வேலைகள் நடந்ததை, தவிர பிரதான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ரூ. 2,400 கோடி வர்த்தகம்

இது குறித்து ‘தி இந்து’விடம் லாசர் எம்எல்ஏ கூறும்போது ஏலக்காய், காபி, தேயிலை, தேங்காய், பழவகைகள், நெல் போன்றவற்றை லாரிகள் மூலம் விற்பனைக்காக வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்றுமதி, இறக்குமதி என சுமார் ரூ. 2400 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. லாரிகளில் அனுப்பப்பட்டு வருவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. அகல ரயில்பாதை சேவை தொடங்கப்பட்டு சரக்கு ரயில் இயக்கப்பட்டால் 60 சதவீதம் செலவு குறைக்கப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும்.

பயணிகள் கட்டணம் மூலமாகவும் ஆண்டு ரூ. 600 முதல் ரூ. 700 கோடி வரை ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கும், ரயில்வே துறைக்கும் ஏற்படும் பயன்கள் குறித்து மத்திய, மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை பதில் அனுப்பவில்லை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மாநில தலைமைச் செயலாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தில் அகல ரயில்பாதை திட்டம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலேயே ரயில்சேவை இல்லாத ஒரே மாவட்டமாக தேனி உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், ரயில்வே பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன், தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போடி தொகுதி எம்எல்ஏவான தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போடி- மதுரை அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x