Published : 15 Dec 2014 04:46 PM
Last Updated : 15 Dec 2014 04:46 PM

கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி: ரஜினி, குஷ்பு நலம் விசாரித்தனர்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரஜினி, குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர்.

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் (84). இவருக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை பற்றி நேற்று மாலை பரவிய தகவலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நடிகர் ரஜினிகாந்த், நடிகை குஷ்பு, இயக்குநர்கள் மனோபாலா, வசந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பாலசந்தரை பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காய்ச்சல், வயது முதிர்வு பிரச்சினையால் மருத்துவ மனையில் கே.பாலசந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பாலசந்தரை பார்த்த பிறகு, ரஜினி கூறும்போது, "அவரை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தார். அவருக்கு எதுவும் ஆகாது" என்றார்.

குஷ்பு கூறும்போது, "கே.பி.சாரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார். என்னை பார்த்து சிரித்தார்" என்றார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்த ரஜினிகாந்த், அவரின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளருக்கு தெரிவித்தார்.

மேடை நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கே.பாலச்சந்தர் 1965-ல் வெளியான நீர்க்குமிழி மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்தவர்.

மனித உறவுச் சிக்கல்களுடன் சமூகப் பார்வை கொண்ட எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை உள்ளிட்ட படைப்புகளைத் தந்தவர்.

திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கே.பாலச்சந்தருக்கு 1987-ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x