Last Updated : 02 Dec, 2014 08:17 PM

 

Published : 02 Dec 2014 08:17 PM
Last Updated : 02 Dec 2014 08:17 PM

இரண்டாம்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது: காஷ்மீரில் 71% ; ஜார்க்கண்டில் 65% வாக்குப்பதிவு

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் 71 சதவீதமும் ஜார்க்கண்டில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் பலம் 87 ஆகும். இதில் முதல்கட்டமாக கடந்த நவம்பர் 25-ம் தேதி 15 தொகுதி களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக குலப்கர், ரியாசி, குல் அர்னாஸ், உதம்பூர், செனானி (தனி), ராம்நகர், சூரன்கோட், மெந்தர், பூஞ்ச் ஹவேலி, கர்னா, குப்வாரா, லோலாப், ஹேண்ட்வாரா, லான்கேட், நூராபாத், குல்காம், ஹோம்-ஹாலிபக், தேவ்சார் ஆகிய 18 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் 4 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரிவினைவாத அரசியல் தலைவர்கள், தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் பொதுமக்கள் பெரும் எண்ணிக் கையில் திரண்டுவந்து வாக்களித்தனர்.

காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. அதை பொருட்படுத்தாது பெண்கள், முதியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 71 சதவீத வாக்குகள் பதிவாகின.

தெற்கு காஷ்மீரின் தேவ்சார், நூராபாத், குல்காம், ரியாஸி தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் இருந்தது. மிக அதிகபட்சமாக ரியாஸி தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பலம் 81. இதில் முதல்கட்டமாக கடந்த 25-ம் தேதி 13 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 61.92 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம்கட்டமாக பகாராகோரா, காட்சிலா, போட்கா, ஜக்சாலை, சேரைகெல்லா, சாய்பாஷா, மாஜ்கோன், ஜெகநாத்பூர், மனோகர்பூர், சாரத்ஹர்பூர், கார்சவாண், தாமர், டோர்பா, ஹண்டி, மந்தர், சிசாய், சிம்டெகா, கோலிபெரா ஆகிய தனி தொகுதிகள், ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு ஆகிய 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தொகுதிகளில் 18 எம்எல்ஏக்கள் உட்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை நிலவரப்படி 65.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

முதல்கட்ட தேர்தலின்போது 3 வாக்குச் சாவடிகளில் முறை கேடுகள் நடைபெற்ற தாக புகார்கள் எழுந்தன அந்த வாக்குச் சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது. அந்தச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்ததாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 9, 14, 20-ம் தேதிகளில் அடுத்தடுத்து வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x