Published : 08 Dec 2014 11:13 AM
Last Updated : 08 Dec 2014 11:13 AM

சென்னை உயர் நீதிமன்றம் அருகே இருந்த நீதி கருமாரியம்மன் கோயில் இடிப்பு

அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே 1984-ம் ஆண்டு கட்டப் பட்ட நீதிகருமாரியம்மன் கோயில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் 1984-ம் ஆண்டு இறுதியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர் பூரண குணமடைய வேண்டி, சென்னை பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில், உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே பொது இடத்தை ஆக்கிரமித்து ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோயில் கட்டப் பட்டது. நாளடைவில் அப்பகுதியில் இக்கோயில் பிரபலமானது.

இருப்பினும், இந்தக் கோயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அதை அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மாநகராட்சி நோட்டீஸ்

இதையடுத்து, கோயிலை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என்று கோயில் அறங்காவலர் காந்தா சீனிவாசனுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோயில் அறங்காவலர் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு டிசம்பரில் இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கோயிலை அகற்றவும் உத்தரவிட்டது.

கண்டிப்பு

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, சென்னை மாநகராட்சியை கண்டித்ததுடன் நீதிகருமாரியம்மன் கோயிலையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நீதிகருமாரியம்மன் கோயில் நேற்று முன்தினம் இரவு இடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x