Published : 03 Dec 2014 03:53 PM
Last Updated : 03 Dec 2014 03:53 PM

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு: பவுலர் சான் அபாட்டிற்கு கடினமான நாள்

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கிற்கு பவுன்சர் வீசிய நியூசவுத்வேல்ஸ் பவுலர் சான் அபாட் தனது அணியினர் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார்.

அவர் இறுதி அஞ்சலி நடைபெறும் பள்ளிக்கு நடந்து வருகையில் புகைப்படக்காரர்கள் அவரை படங்கள் எடுத்துக் குவித்தனர்.

சாதாரணமாக தெருவில் சான் அபாட் நடந்தால் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று யாரும் கருத மாட்டார்கள், ஆனால் பிலிப் ஹியூஸ் மரணத்திற்குப் பிறகு அவர் தற்போது ஆஸ்திரேலியா முழுதும் அனைவராலும் அறியப்பட்ட, அனுதாபத்திற்குரிய வீரராகியுள்ளார்.

பேருந்தில் அவர் ஜோஸ் ஹேசில்வுட் பின்புறம் அமர்ந்திருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹேசில்வுட்டுடன் சான் அபாட் நிறைய ஓவர்களை சேர்ந்து வீசியுள்ளார்.

காமிராக்கள் தன்னையே மொய்க்கும் என்பதை உணர்ந்த அபாட், இறுகிய முகத்துடன், துயரத்துடன் தனது அணி வீரர்களுடன் அவசரம் அவசரமாக இணைந்து கொண்டார்.

ஆனால், பிலிப் ஹியூஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பலரும் சான் அபாட்டைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் நேராக சான் அபாட்டிடம் சென்று அபாட்டின் கையைப் பிடித்துக் கொண்டார். ஆனால், அவர் தனது அணியினருடன் இணைவதில் முனைப்பு காட்டினார்.

சான் அபாட்டின் தாய் ஜார்ஜினா, தந்தை நேதன் ஆகியோர் அபாட்டின் துயரத்தை பெரிதும் தாங்கியதாக கூறப்படுகிறது.

சான் அபாட்டின் வருகையைக் காண்பிக்க சானல் 9 முயலவில்லை. சானல் 9-ன் இந்தச் செய்கை மிகவும் நியாயமாக அங்கு பார்க்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கிற்கு சான் அபாட் வந்ததே அவரது தைரியத்தைக் காட்டுவதாக பலரும் கருதுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடும் பெரும் கனவுடன் விளையாடி வரும் 22 வயதான சான் அபாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் துயரமே. வக்கார் யூனிஸ் கூறுவது போல் அவர் இனி எப்படி விளையாட முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஆனால், அவர் ஓரளவுக்கு இதிலிருந்து மீண்டுள்ளார் என்று அவரது நண்பர்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x