Published : 06 Dec 2014 10:24 AM
Last Updated : 06 Dec 2014 10:24 AM

ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக் கோரி தஞ்சை அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்: புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட எதிர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப் பேட்டை ஒன்றியம் நெய்குன்னம் ஊராட்சியில் உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் விளைநிலங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட எதிர்ப்பு தெரிவித்தும், இந்தப் பணியில் ஈடுபட்ட மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியும் கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாம்பாள்புரத்தில், பாசனக் குழு தலைவர் பால.கோதண்ட பாணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிர்வாகிகள் வா.சி.ராமச்சந்திரன், பனசை. அரங்கன், சமுதாய நலச் சங்க செயலர் சிவநேசன், திமுக கிளைச் செயலர் ரகு, களஞ்சேரி கூட்டுறவுச் சங்க இயக்குநர் சாமி அய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளைநிலங்களில் ஒஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரி வாயு கிணறுகள் தோண்டுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறை கிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. கட்டிடங்கள் மண்ணில் புதைகின்றன. மேலும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் கச்சா எண்ணெய் கசிந்து விளை நிலங்கள் பாழடைவதாகவும் கூறி, இப்பகுதியில் ஏற்கெனவே இயங்கி வரும் 3 எண்ணெய் கிணறுகளையும் மூட வலியுறுத்தியும், புதிதாக 2 கிணறுகள் தோண்டும் திட்டத்தை நிறுத்திவிட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் இப்பகுதியில் இருந்து வெளியேற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கைளை வலியுறுத்தி ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, தங்கள் பணிகளால் இதுவரை எந்த பெரிய பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை எனக் கூறி ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x