Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

குரூப் -4 பணி ஒதுக்கீடு: பொது கலந்தாய்வு தொடங்கியது

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில், முதல் ரேங்க் பெற்ற கடலூர் கே.எஸ்.பாலாஜி பதிவுத் துறையையும், 2-வது இடத்தைப் பிடித்த கோவில்பட்டி எஸ்.பிரபாகர் வணிகவரித் துறையையும், 3-ம் இடம் பெற்ற திருச்சி சி.அகஸ்டின் வருவாய்த் துறையையும் தேர்வுசெய்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற இவர்கள் மூவரும் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளில் 5,855 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவு மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் முறையாக தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் அடங்கிய தரவரிசை பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக இளநிலை உதவியாளர் பணியிடங்களில் சிறப்பு பிரிவின ருக்கான 416 காலியிடங்களை நிரப்ப மார்ச் 24 முதல் 28 வரை கலந்தாய்வு-சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

பொறியாளர்கள் சாதனை

இதைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன் கிழமை தொடங்கியது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த தேர்வர்களுக்கு புதன்கிழமை ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இந்த மூவரும் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ரேங்க் பெற்ற கடலூர் பாலாஜி பதிவுத்துறையையும், 2-வது இடத்தைப் பிடித்த கோவில்பட்டி எஸ்.பிரபாகர் வணிகவரித்துறையையும், 3-ம் இடம் பெற்ற திருச்சி அகஸ்டின் வருவாய்த்துறையையும் தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் வழங்கினார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.

ரேங்க் பெற்ற மூவரும் கூறும் போது, “டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எவ்வித ஒளிவு மறைவுமின்றி நடத்தப்படுகிறது, திறமை இருந்தால் யார் வேண்டு மானாலும் வெற்றிபெற்ற முடியும். ரேங்க் பட்டியல் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது” என்று தெரி வித்தனர்.

பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திறமை அடிப்படையில் பணி

டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல் முறையாக குரூப்-4 தேர்வெழுதி யவர்களின் ரேங்க் பட்டியலை வெளி யிட்டிருக்கிறோம். அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

எவ்விதமான ஒளிவு மறைவுமின்றி தேர்வு நடத்தி முடிவை வெளியிடு கிறோம். திறமை அடிப்படையில்தான் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பதார்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஏதேனும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவை சரிசெய்யப்படும்.

தினமும் 300 பேர் பங்கேற்பு

பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு மே 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி 300 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்வார்கள். 1,843 தட்டச்சர் பதவிகள் மற்றும் 308 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.

பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு மே 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி 300 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்வார்கள். 1,843 தட்டச்சர் பதவிகள் மற்றும் 308 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x