Last Updated : 01 Nov, 2014 10:45 AM

 

Published : 01 Nov 2014 10:45 AM
Last Updated : 01 Nov 2014 10:45 AM

போதை பொருள் கடத்திய வழக்கில் இந்திய சிறைகளில் 43 இலங்கை கைதிகள்

போதை பொருட்கள் கடத்திய வழக்கில் இலங்கையை சேர்ந்த 43 பேர் இந்திய சிறைகளில் உள்ளனர். இதில் தமிழக சிறைகளில் 11 பேர் உள்ளனர்.

போதை பொருட்கள் கடத்தியதாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்தனர். 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் போதை பொருட்கள் கடத்திய வழக்கில் இந்தியா விலும் ஏராளமான இலங்கை கைதிகள் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை அரசியல்வாதிகளின் ஆதரவுடன் போதை பொருட்கள் கடத்தல் நடக்கிறது. இதுகுறித்த செய்திகளும் அங்குள்ள பத்திரிகைகளில் அடிக்கடி வெளியாகியுள்ளன.

இந்நிலையில், போதை பொருட் களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியுள்ள இலங்கை, இதற்கு முதல் பலியாக தமிழக மீனவர்களின் உயிரை பறிப்பதற்கு காத்திருக்கிறது.

2011-ம் ஆண்டில் இலங்கையில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக 25 பாகிஸ்தானியர், தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட 16 இந்தியர், 6 மாலத்தீவினர், 5 ஈரானியர் கைது செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டில் வெளிநாடுகளை சேர்ந்த 58 பேரை போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் இலங்கை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை வழங்கப்பட்டது என்ற விவரம் இதுவரை வெளியிடப் படவில்லை.

தமிழக மீனவர்களுக்கு மட்டும் உடனே தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. இலங்கையை சேர்ந்த 3 பேருக்கும் தமிழக மீனவர்களுடன் சேர்த்து போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக இலங்கையின் நடவடிக்கை இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சிறைகளில் 11 இலங்கை கைதிகள்

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 400 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்களில் 110 பேர் இலங்கை கைதிகள். இதில் 43 பேர் போதை பொருட்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தமிழக சிறைகளில் உள்ளனர். கடந்த 18-ம் தேதி பூந்தமல்லி நரசிம்மன் மல்லீஸ்வரர் நகரில் பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த தந்தை-மகனான ரபீக், கவுஸிக் ஆகியோரை மத்திய உளவுத்துறை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ ஹெராயின் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட இலங்கையை சேர்ந்த 11 பேர் போதை பொருட் கள் கடத்தல் வழக்கில் தமிழக சிறைகளில் உள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் என்ன?

இந்திய போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன் படி போதைப் பொருள் கடத்துவோருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. போதை பொருட்கள் கடத்திய வழக்குகளில் இந்தியாவில் இதுவரை யாருக்கும் மரண தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப மரண தண்டனை கொடுக்க நமது சட்டத்திலும் இடம் உள்ளது.

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை தடுக்க ஒரு ஆணையம் இந்தியாவில் உள்ளது. சென்னை உட்பட 12 நகரங்களில் இந்த ஆணையத்தின் அலுவலகம் உள்ளது.

இந்த ஆணையத்தால் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரையும், ஒரு சிலருக்கு ஆயுள் தண்டனையும் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன.

சவுதிஅரேபியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா உட்பட சில நாடுகளில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது இலங்கையும் சேர்ந்துள்ளது.

சென்னையில் 3 நீதிமன்றங்கள்

போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னையில் மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. போதை பொருட்களை கடத்துப வர்கள் மீது பதிவாகும் வழக்குகள் அனைத்தையும் இந்த மூன்று நீதிமன்றங்களும் விசாரிக்கும்.

இந்த நீதிமன்றங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் வருகின்றன. இதில் சுமார் 50-வழக் குகளில் இலங்கை நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x