Published : 21 Nov 2014 10:47 AM
Last Updated : 21 Nov 2014 10:47 AM

தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கு 30 கூடுதல் படுக்கைகள்

தருமபுரி அரசு மருத்துவ மனையின் குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் ஆய்வு மேற் கொண்டார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 குழந்தைகள் இறந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் சண்முகம் நேற்று இளம் குழந்தைகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் திட்ட இயக்குநர் சண்முகம் கூறியதாவது: தற்போது பச்சிளங் குழந்தைகள் பிரிவில் 70 குழந்தைகளுக்குத் தரமான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் பெண் களுக்கு தேவைக்கேற்ப ரத்தப் பரிசோதனை செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 7 செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேலும், இளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக ரூ.30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் ஏற்கெனவே கூடுதல் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வ லர்கள் மூலம் தினமும் கவுன் சிலிங் அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதைப்போலவே பிரசவத் துக்காக வரும் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த வர்களுக்குக் குழந்தை பெறும் முன் மற்றும் குழந்தை பிறந்த பின் ஆலோசனைகள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுப்பணி மூலம் 4 மருத்துவர்கள், 6 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், சுகாதாரப் பணி யாளர்கள், கடைநிலை ஊழி யர்கள் கூடுதலாக நிய மிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அங்கன்வாடி மூலம் கர்ப்பிணி களுக்கு சத்துமாவு வழங்கப் படுவதை மேலும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குழந்தையை வேலூருக்கு அனுப்பியது ஏன்?

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்-ராணி தம்பதியருக்கு கடந்த 17-ம் தேதி பாலக்கோடு அருகேயுள்ள புலிகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.5 கிலோ எடைகொண்ட அந்த குழந்தை அழாமலும், அசைவின்றியும் இருந்ததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது.

சிகிச்சையில் இருந்த குழந்தையை திடீரென 19-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இளம் குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வழக்கமாக தருமபுரியில் இருந்து மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் சேலத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

70 கிலோ மீட்டர் தொலைவில் அதி நவீன வசதிகளுடன் இயங்கும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதன் பின்னணி குறித்து அரசு மருத்துவமனையில் இருந்த பலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இதுகுறித்து சிலர் கூறியபோது, ‘அடுத்தடுத்து குழந்தைகள் இறந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு குழந்தை இறந்தால் மருத்துவமனைக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு குழந்தை சீரியஸாக இருப்பதாக சித்தரித்து மேல் சிகிச்சைக்கு வேலூர் அனுப்பியிருக்கலாம். நெருக்கடியை சமாளிக்கவே இப்படியொரு நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x